நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வலுவான எதிர்க்கட்சியைத் தேர்வு செய்துள்ளது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார். பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். இவ்விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பது மகத்தான சாதனை.
லோக்சபா தேர்தலில், மக்கள் வலுவான எதிர்க்கட்சியைத் தேர்வு செய்துள்ளனர். வலுவான எதிர்க்கட்சியைத் தேர்வு செய்தது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி. விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்றதற்கு திருமாவளவன் மற்றும் சீமானுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கும் அழைப்பு வந்துள்ளது. அங்கு செல்வது குறித்துப் பிறகு தெரிவிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.