“அமைச்சர் பதவியில் விருப்பமில்லை, விரைவில் நான் விடுவிக்கப்படலாம்” – நடிகர் சுரேஷ் கோபி

திருவனந்தபுரம்: “கேரள மக்களின் பிரதிநிதியாக மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்” என்று மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு நேற்று நடந்தது. இதில் கேரள மாநிலத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் வகையில் கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இன்னும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

எனினும், பதவியேற்ற சில மணிநேரங்களில் மலையாள ஊடகங்களுக்கு அளித்த பேட்டியளித்த சுரேஷ் கோபி, “எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு. இதனை முன்கூட்டியே பாஜக தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். கமிட் ஆன படங்களில் நடித்தே ஆக வேண்டும். எனவே, அமைச்சர் பொறுப்பு எனக்கு வேண்டாம் என்றேன். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் பதவி பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், விரைவில் நான் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவேன் என நம்புகிறேன்.

எனக்கு தெரியும், அவர்கள் என்னை விடுவிப்பார்கள். எம்.பி. என்ற நிலையில் திருச்சூருக்கு தேவையான பணிகளை மிக சிறப்பாக செய்வேன். எய்ம்ஸ் மருத்துவமனையை இங்கு கொண்டுவர உழைப்பேன்” எனக் கூறியிருந்தார். பதவியேற்ற அன்றே அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை எனப் பேசிய இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது அவர், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக வெளியான தகவல் தவறானது. இது முற்றிலும் தவறானது. கேரள மக்களின் பிரதிநிதியாக மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். பிரதமர் மோடி தலைமையில், கேரளா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அடைய உழைப்போம்” என்று சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமரை தேர்வு செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் சனிக்கிழமை இரவு மீண்டும் கேரளா திரும்பினார் சுரேஷ் கோபி. மறுநாள் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்காக டெல்லி செல்ல அவர் எந்த விமானத்திலும் முன்பதிவு செய்யவில்லை. இதனால் அமைச்சர் பதவிக்கு வேறு ஒருவர் பரிசீலிக்கப்படுவதாக வதந்தி பரவியது. இந்த ஊகங்களுக்கு மத்தியில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ராஷ்டிரபதி பவனில் இருந்தும், பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், சுரேஷ் கோபிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அவரை நேரடியாக அழைத்து பேசி, உடனடியாக வருமாறு வலியுறுத்திய பின்னரே நேற்று மதியம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து அவசர அவசரமாக டெல்லி கிளம்பி சென்றார் அவர். விமான நிலையத்தில் பேட்டியளித்த சுரேஷ் கோபி, “மோடி முடிவு செய்தார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்” எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.