ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமென பலரிடம் ரூ.30 கோடி வரை பந்தயம் கட்டிய நபர், அக்கட்சி படுதோல்வியை சந்தித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் தெலுங்கு தேசம் கூட்டணி 175 தொகுதிக்கு 164 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதேபோல், 25 மக்களவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளை கைப்பற்றியது. தெலுங்கு தேசம் கட்சிதான் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாகும். இக்கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தற்போது தேசிய அரசியலில் பெரும் பங்கு வகிக்கும் தலைவராக உள்ளார். இவர் வரும் 12-ம் தேதி அமராவதியில் 4-வது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவி பிரமாணம் எடுக்க உள்ளார்.
இவ்விழாவிற்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் வருகை தர உள்ளதால், சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழா தடபுடலாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும், அமராவதியில் கெனரபல்லி எனும் இடத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இவ்வளவு படுதோல்வியை சந்தித்துள்ளது என்பதை அக்கட்சியினர் இன்னமும் ஜீரணித்து கொள்ள முடியாமல் உள்ளனர். அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் உள்ளது. படு தோல்வி காரணமாக இவர்கள் வெளி ஆட்களை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இதனிடையே, ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், நூஜிவேடு மண்டலம், தூர்ப்பு திகுபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் ரெட்டி (52). இவர் 7-வது வார்டு உறுப்பினர். இவரது மனைவி விஜயலட்சுமி ஊர் பஞ்சாயத்து தலைவர். இவர்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியே மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தான் ஆந்திராவில் வெற்றிபெறும் எனவும் வேணுகோபால் ரெட்டி பலரிடம் ரூ. 30 கோடி வரை பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் ஜெகன் கட்சி படு தோல்வியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது, வேணுகோபால் ரெட்டி, வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு, தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதால், பந்தயம் கட்டியவர்கள் வேணுகோபாலுக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரது போன் செயலிழந்திருந்ததால், ஆத்திரம் கொண்ட சிலர் வேணுகோபாலின் வீட்டிற்கு சென்று, நடந்த விஷயங்களை அவரது மனைவி விஜயலட்சுமியிடம் கூறி, வீட்டில் இருந்த ஏசி, டிவி, சோஃபா செட், பைக் போன்றவற்றை கொண்டு சென்று விட்டனர்.
இதற்கிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய வேணுகோபால் வீட்டின் நிலைமை பார்த்துள்ளார். அப்போதும் பந்தயம் கட்டியவர்கள் பந்தயத்திற்கான பணத்தை தரும்படி கேட்டுள்ளனர். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான வேணுகோபால் ரெட்டி, ஊருக்கு ஒதுக்குபுறமாக சென்று, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏலூரு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.