புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு நடிகையும், பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு தரிசன நிமித்தமாக பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்து மக்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் குணம் பெற வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என கங்கனா தெரிவித்துள்ளார்.
ரியாசியில் உள்ள சிவ் கோரி கோயிலுக்கு சென்றுவிட்டு கட்ரா நோக்கி யாத்ரீகர்கள் பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதனால், பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். சினிமா நடிகர்கள் வருண் தவான், அனுபம் கெர் உள்ளிட்டோரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தில் இந்திய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.