கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் கடந்த மே மாதம் 30-ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானைக்கு தொடர்ந்து 5 நாள்கள் சிகிச்சை அளித்தனர். தாய் யானையின் அருகிலேயே, மூன்று மாத குட்டி யானையும் இருந்தது. தொடக்கத்தில் குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வந்தநிலையில், பிறகு அது அங்கிருந்து கிளம்பி யானைக் கூட்டத்துடன் சென்றது.
இதனிடையே உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
ஆனால், கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை, விளை நிலங்களில் சுற்றியது. குட்டி யானையை, தாயுடன் சேர்க்க பல கட்டங்களாக வனத்துறையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டனர். அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதன் காரணமாக குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று அதிகாலை முதுமலை யானைகள் முகாமுக்கு குட்டி கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, 10 நாள்களுக்கு மேலாக குட்டி யானையுடன் பயணித்த வனத்துறையினர் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் பராமரிப்பில் முன்னோடி வளர்ப்பு யானைகள் முகாமாக விளங்கி வரும் முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைக்குட்டியை கூடுதல் கவனத்துடன் பராமரித்து வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், “தாயைப் பிரிந்த நிலையில், பாலூட்டும் பருவத்தில் ஏற்கெனவே இரண்டு யானைகளை பராமரித்து வருகிறோம். மூன்றாவதாக இந்தக் குட்டி கொண்டுவரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஆட்களை நியமித்திருக்கிறோம். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை திரவ உணவுகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறோம். நடைபயிற்சியும் அளிக்கப்படுகிறது. குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb