ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் உயிர் பிழைத்த ஒருவர் இறந்து போனது போல நடித்ததாக தெரிவித்துள்ளார்.
ரியாசியில் உள்ள சிவ் கோரி கோயிலுக்கு சென்றுவிட்டு கட்ரா நோக்கி யாத்ரீகர்கள் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதனால், பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தில் இந்திய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலில் உயிர்பிழைத்த நபர் ஆங்கில செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த பிறகும் தீவிரவாதிகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து சில நிமிடங்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் நாங்கள் அமைதியாக இருந்தோம். உயிரிழந்து போல நடித்தோம். அதன் பின்னர் தான் எங்களை மீட்புப் படையின் மீட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ராண்ட் (டிஆர்எஃப்) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.