ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் நேரடி உலகளாவிய வாக்குரிமை மூலம் ஐந்தாண்டு காலத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
அவ்வகையில் இந்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெறும் இந்த தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள 720 இடங்களில் பெரும்பான்மை பெற 361 இடங்கள் தேவை. பிரதான கட்சிகள் மற்றும் ஐரோப்பிய சார்பு கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்தின் கீர்ட் வில்டர்ஸ் மற்றும் பிரான்சின் மரைன் லு பென் போன்றவர்கள் தலைமையிலான கட்சிகள் உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஐரோப்பாவிற்கு புதிய சட்டத்தை இயற்றுவதையும் முடிவுகளை எடுப்பதையும் கடினமாக்கும்.
இன்று இரவு 11 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. அதாவது, இத்தாலியில் உள்ள வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு நிறைவடையும் கடைசி வாக்குச்சாவடிகள் ஆகும். அங்கு இரவு 11 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். புதிய நாடாளுமன்றம் யார் தலைமையில் அமையும்? என்பது பற்றிய தெளிவான முடிவு நாளை தெரியவரும்.