கங்கனா ‘பயங்கரவாதம்’ என்றதும், அவரை பெண் காவலர் அறைந்ததும் தவறுதான்: பஞ்சாப் முதல்வர்

புதுடெல்லி: “விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா முன்பு தெரிவித்த கருத்துகளால் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கோபமடைந்திருக்க கூடும். இதனால் அவர் கங்கனாவை அறைந்திருக்கலாம். இருப்பினும் இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “விசாயிகள் குறித்து கங்கனா முன்பு தெரிவித்த கருத்துகளால் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கோபமடைந்திருக்க கூடும். இதனால் அவர் கங்கனாவை அறைந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் விவசாயிகளை பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று சொல்கிறீர்கள்.

விவசாயிகள் போராட்டம் நடத்தினால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களை இவ்வாறு குறிப்பிடுவது தவறு. ஒருவர் திரைப்பட நடிகராக இருந்தாலும் அல்லது எம்பியாக இருந்தாலும் சரி, பஞ்சாப் முழுவதையும் பயங்கரவாத நாடு என்று முத்திரை குத்துவது மற்றும் மாநிலத்தில் பயங்கரவாதம் இருப்பதாகக் கூறுவது தவறு. இருப்பினும் இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது? – பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு அண்மையில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் கங்கனா ரனாவத். இவர் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த பெண் காவலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பெண் காவலர் ரனாவத்தை கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

விவசாயிகளை பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.