சென்னை: சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; ஆண் நண்பருடன் சிக்கிய துணை நடிகை!

சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் 15 வயது சிறுமி. இவரின் குடும்பம் வசதியானது. மேலும் இவர் சென்னையில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இவர் அடிக்கடி அண்ணாநகரில் உள்ள கஃபே ஒன்றுக்கு செல்வதுண்டு. அப்போது அதே கஃபேவுக்கு சென்னையைச் சேர்ந்த பிரதிஷா ஆதிரா என்பவர் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் வந்திருக்கிறார். பள்ளி மாணவியிடம், நீ அழகாக இருக்கிறாய், சினிமாவின் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று பிரதிஷா கூறியிருக்கிறார். அதன்பிறகு பள்ளி மாணவியும் பிரதிஷாவும் தோழிகளாகியிருக்கிறார்கள். இந்தநிலையில் பிரதிஷாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் வந்திருக்கிறது. அதை சாலிகிராமத்தில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் நண்பர்களுடன் கொண்டாட பிரதிஷா திட்டமிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பிறந்த நாள் விழாவுக்கு பள்ளி மாணவியையும் பிரதிஷா அழைத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறி விட்டு பள்ளி மாணவியும் அந்த விழாவுக்கு சென்றிருக்கிறார். விழாவில் ஆட்டம், பாட்டம் என விடிய விடிய கொண்டாட்டத்தில் பிரதிஷா, பள்ளி மாணவி மற்றும் பிரதிஷாவின் நண்பர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது பள்ளி மாணவிக்கு இனிப்பை ஊட்டியிருக்கிறார் பிரதிஷா. அதை சாப்பிட்டதும் மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரை அங்குள்ள அறையில் ஓய்வெடுக்க பிரதிஷா கூறியிருக்கிறார். அப்போது அந்த அறைக்குள் சென்ற பிரதிஷாவின் ஆண் நண்பர் வில்லியம்ஸ் என்பவர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன்பிறகு பிரதிஷாவின் இன்னொரு நண்பரான இளைஞர் ஒருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

மயக்கம் தெளிந்த பள்ளி மாணவி, தனக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பிரதிஷாவிடம் உன்னை நம்பிதானே பர்த்டே பார்ட்டிக்கு வந்தேன். ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டிருக்கிறார் பள்ளி மாணவி. அதற்கு பிரதிஷா, இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னுடைய அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவோம். அதோடு உன்னையம் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளார். அதனால் வீட்டுக்குச் சென்ற பள்ளி மாணவியும் அமைதியாக இருந்திருக்கிறார். ஆனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

அதனால் மாணவியின் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். மேலும் அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவலை மாணவியின் குடும்பத்தினரிடம் கூறினர். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் உதவி கமிஷனர் கருணாகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவிகா, பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி அளித்த தகவலின்படி பர்த்டே பார்ட்டி நடந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது பிரதிஷா மற்றும் அவரின் ஆண் நண்பர்கள் கல்லூரியில் படிக்கும் இளைஞர், வில்லயம்ஸ் ஆகியோர் அங்கு வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து பிரதிஷா, மற்றொரு இளைஞர் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் வில்லியம்ஸை போலீஸார் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “கைதான பிரதிஷா, சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராகவும் துணை நடிகையாகவும் உள்ளார். மற்றொரு இளைஞர், கல்லூரியில் படித்து வருகிறார். பிரதிஷாவின் உதவியோடுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.