USA vs IND Match: 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்த தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது குரூப் சுற்று போட்டிகள் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக சமமான அளவில் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளான பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் முறையே அமெரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்ததால் குரூப் சுற்றின் ஒவ்வொரு போட்டியும் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில், நேற்று நடந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மிக முக்கியமான போட்டியாகும்.
சொதப்பிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி வென்றே ஆக வேண்டிய நேற்றைய போட்டியில், பந்துவீச்சில் கலக்கி இந்திய அணியை 119 ரன்களில் அடக்கியது. ஆனால், மறுபுறம் பாகிஸ்தான் தனது பேட்டிங்கின் கடைசி கட்ட ஓவர்களில் சொதப்பி 6 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம், இந்திய அணி இந்த தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது.
பாகிஸ்தான் அணியின் தோல்வியால் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறும் சூழலில் உள்ளது எனலாம். பாகிஸ்தான் அடுத்து கனடா மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மோத உள்ளது. இதில் பாகிஸ்தான் அதிக நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியா அல்லது அமெரிக்க அணிகளில் ஒன்று அடுத்த வரும் அதன் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்கா vs இந்தியா
அந்த வகையில், குரூப் ஏ-வில் அமெரிக்கா – இந்தியா (USA vs IND) இடையேயான போட்டி மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். தோல்வியடையும் அணி அடுத்த போட்டியில் நிச்சயம் வென்றால்தான் சூப்பர் 8 சுற்றுக்கு வாய்ப்பு வரும். இந்தியா – அமெரிக்கா போட்டிக்கு பிறகு, இந்திய அணி (Team India) கனடா உடனும், அமெரிக்க அணி (Team USA) அயர்லாந்து உடனும் மோத உள்ளன. எனவே, இந்த இரு அணிகளும் அடுத்து வரும் போட்டிகளில் மிகுந்த கவனமுடன் செயல்படும். கடந்த டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்த பாகிஸ்தான் இந்த முறை முதல் சுற்றோடு வெளியேற்றும் வாய்ப்பு அதிகமாகும்.
இந்நிலையில் இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளில் அதன் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்யும் எனலாம். குறிப்பாக, அடுத்து ஜூன் 12ஆம் தேதி நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி நிச்சயம் ஒரு மாற்றத்தை செய்தாக வேண்டும்.
வெளியேற்றப்படும் தூபே
ஆம், ஷிவம் தூபே (Shivam Dube) கடந்த சில போட்டிகளில் (ஐபிஎல் உள்பட) மிக மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார். நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கின்போது, இந்தியா விக்கெட்டே கைப்பற்றாமல் திணறிவந்த வேளையில் முகமது ரிஸ்வான் கொடுத்த எளிய கேட்சை தவறவிட்டது வர்ணையாளர்கள், ரசிகர்கள் தரப்பில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
நியூயார்க் ஆடுகளத்திற்கு அவரின் ஆட்டம் சரிவராது என பலரும் குரலெழுப்பி வருகின்றனர். எனவே, அவருக்கு பதில் வேறு ஒரு பேட்டரை ரோஹித் – டிராவிட் இணை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், சஞ்சு சாம்சன் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பந்துவீச்சில் சரியான காம்பினேஷன் அமைந்திருக்கிறது. 8ஆவது வீரர் வரை பேட்டிங் ஆப்ஷனும் கிடைக்கிறது என்பதால் பந்துவீச்சில் எவ்வித மாற்றமும் செய்ய இந்த சூழலுக்கு தேவையில்லை.
சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்பு
சஞ்சு சாம்சனை (Sanju Samson) பேட்டிங் ஆர்டரில் எங்கு வேண்டுமானாலும் இறக்கிக்கொள்ளலாம் என்பதால் ஜெய்ஸ்வாலை விட அவருக்கே அணியில் இடம்பெற அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல் சாம்சன் பீல்டிங்கிலும் மிரட்டுவார் என்பது கூடுதல் சிறப்பு. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓப்பனர் ஆவார், அவரை ஓப்பனிங்கில் இறக்கினால் தற்போதைய பேட்டிங் ஆர்டரில் குழப்பம் ஏற்படும். எனவே, தூபேவுக்கு பதில் சஞ்சு சாம்சன் விளையாடவே 99% வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் இதுவரை ஐசிசி தொடர்களில் ஒரு போட்டியை கூட விளையாடாதது குறிப்பிடத்தக்கது.