“பிரிந்த சக்திகள் ஒன்றிணையாவிட்டால் அதிமுக ஒருபோதும் வெல்லாது” – ஓபிஎஸ் உறுதி

சென்னை: “பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையாவிட்டால், அதிமுக எந்தக் காலத்திலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது,” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. அதற்கு முந்தைய தினம் கூட்டணி கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். பதவியேற்பு விழா முடிந்த நிலையில் இன்று விமானத்தில் சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வாழும் மக்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தமிழகத்தில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும் சூழல் இருந்து வருகிறது. அதிமுகவை எம்ஜிஆர் தொண்டர்களின் இயக்கமாக தான் உருவாக்கினார். அதை ஜெயலலிதா மக்கள் இயக்கமாக மாற்றியதால் தான் 16 ஆண்டுகள் அவர் முதல்வராக ஆளும் உரிமையை பெற்றார். மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது, 9 இடங்களில் 3-ம் இடத்துக்கு சென்றது தொடர்பாக, அதிமுகவின் தற்காலிக பொறுப்பு ஏற்றிருக்கும் தலைமையிடம் தான் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக அதிக வாக்குகள் பெற்று வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முழு வீச்சாக களத்தில் இறங்கி, 24 மணி நேரமும் வெற்றிக்காக அரும்பாடுபட்டார் என்பது முக்கிய காரணம்.

தமிழகத்தில் 60 சதவீத மக்கள்தான் அரசியல் இயக்கங்களில் உள்ளனர். பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் மனதை வென்றவர்கள், இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிமுகவின் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் அதிமுக வெற்றிபெற முடியாது,” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.