“பிரேமலதா பேசுவது சிறுபிள்ளைத்தனம்” – மாணிக்கம் தாகூர் விமர்சனம் @ விருதுநகர் முடிவுகள் சர்ச்சை

மதுரை: “விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகள் வீடியோ கண்காணிப்புடன் எண்ணப்பட்டது. முடிவு வெளியான பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து கொண்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது,” என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மதுரை திருநகரிலுள்ள அவரது அலுவலகத்தில், வாளுக்கு வேலி அம்பலத்தின் 223வது பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இம்முறையும் தமிழகத்தை பாஜக அரசு மீண்டும் வஞ்சிக்கிறது. ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்துக்கு பாஜக கொடுத்திருக்க வேண்டும். பாஜக அரசுக்கு அதற்கு மனமில்லை.

விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்குகள் எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினர். வாக்குகள் வீடியோ கண்காணிப்புடன் எண்ணப்பட்டது. முடிவு வெளியான பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து கொண்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

3-வது முறையாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக தோல்வியை தழுவியது உண்மை. பாஜக ஆயுட் காலம் இம்முறை பிஹார் தேர்தலில் முடிந்து விடும். இண்டியா கூட்டணி பிஹாரில் ஆட்சி அமைக்கும். எப்போது பாஜக ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் தீவிரவாத தாக்குதல் நடக்கிறது. பலமான, பாதுகாப்பான நாடு என கூறும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்காக தலைகுனிய வேண்டும். விஜயகாந்த் இருக்கும்போதே , தேமுதிக விருதுநகர் தொகுதியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

தமிழக அரசியலில் 20 சதவீதம் வாக்குகள் அதிமுக, திமுகவுக்கு எதிராக இருக்கும். 70 சதவீத வாக்குகள் அதிமுக, திமுகவுக்கு இருக்கும். பாஜகவின் வளர்ச்சியைப் பற்றி அதிமுக தான் யோசனை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாஜகவின் வளர்ச்சி பெரிதாக தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெள்ளை மனம் படைத்தவர். ராகுல் காந்தி பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். அதற்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டோம்.

விருதுநகர் தொகுதியைப் பொருத்தவரை, மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது, கூடுதல் பாதையை விரிவாக்கம் செய்வது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகளை முடித்தல். ரயில்வே துறையிலுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். திருமங்கலம் ரயில்வே நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். கைவிட்ட மதுரை -அருப்புக்கோட்டை-தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். விருதுநகர் தொகுதி மக்களுக்கு எனது நன்றி. சென்னையில் இருந்த நட்சத்திரங்கள் விருதுநகர் தொகுதிக்கு வந்தன. பகல் வந்ததும் எப்படி மறையுமோ அதுபோன்று போட்டியிட்ட நட்சத்திரங்களும் சென்னைக்கு சென்றுவிட்டன, என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.