விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்ற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவை அளிக்கும். திமுக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்கும்.

நீட் தேர்வு விலக்கு கோரி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் என்ற கொடிய எமன் அகற்றப்பட வேண்டும். சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். அதை ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவு வெளியான அன்றே நீட் தேர்வு முடிவும் வெளியானபோது அதன் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீட் தேர்வில் இரட்டை படையில் தான் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் சிலருக்கு ஒற்றைப்படையில் மதிப்பெண்கள் இருந்தது. இது குறித்து விசாரித்தபோது, வினாத்தாள் கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த கருணை மதிப்பெண் கொடுப்பதில்லை.

நீட் பயிற்சி நிறுவனத்தில் படித்துவர்களுடன் ஒப்பந்தம் போட்டு கருணை மதிப்பெண் கொடுக்கிறார்கள். நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. இது மாணவர்களை ஏமாற்றும் செயல். நீட் தேர்வு வர்த்தகத்தின் சூதாட்டம், வணிகமாக மாறிவிட்டது. நீட் தேர்வில் ஆண்டுதோறும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆக கூடாது என்று ஆர்எஸ்எஸ், பாஜக தான் முடிவு செய்கிறது.

இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று மோடி தேர்தல் பரப்புரை செய்தார். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் 10 பேரை தீவிரவாதிகள் கொன்றார்கள். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் கட்சிப் பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டது.” என்று அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.