விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார், நடிகை வனிதா விஜய்குமாரின் மகன் விஜய் ஶ்ரீஹரி.
இவர் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பது இயக்குநர் பிரபு சாலமன். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், படத்தில் தன் மகளை கதாநாயகியாக அறிமுகம் செய்வதுதான். ஏற்கெனவே, சமூக வலைதளங்களில் வைரலானவர் பிரபு சாலமனின் மகள் ஹசேல் ஷைனி.
படத்தின் தொடக்க வேலைகள் தொடங்கிவிட்ட சூழலில், படத்துக்காக சில விசேஷ பயிற்சிகள் பெற வேண்டி சில வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று வந்தாராம் விஜய் ஶ்ரீஹரி.இது தொடர்பாக விஜய் ஶ்ரீஹரியின் அப்பாவும் நடிகருமான ஆகாஷுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.
”விஜய் ஶ்ரீஹரிக்கு இப்ப வயசு 25ஐ தாண்டிடுச்சு. அவருக்குச் சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்கிற ஆர்வம் இருந்துட்டு வருது. இதுதான் சினிமாவுல நுழையறதுக்குச் சரியான சூழலா இருக்கும்னு அவருடைய அப்பா நினைக்கிறார். பையன் விருப்பத்துக்கு எப்பவுமே மறுப்பு எதுவுமே சொல்றதில்லை ஆகாஷ். ஶ்ரீஹரிக்குச் சினிமா வாய்ப்புகள் கடந்த சில வருஷமாகவே வந்துட்டிருந்த போதும், பெரிய பேனர் அல்லது முன்னணி இயக்குநர்கள் மூலமா அறிமுகமானா நல்லா இருக்கும்னு நினைச்சார் ஆகாஷ்.
அவர் நினைச்சது போலவே இயக்குனர் பிரபு சாலமன் ஒரு கதைக்காக புதுமுகத்தைத் தேடி வர, அந்தப் புதுமுகம் விஜய் ஶ்ரீஹரியாகி விட்டாராம். கதைக்குப் பொருத்தமான ஹீரோவாக விஜய் ஶ்ரீஹரி அமைந்து விட்டதால், படத்தின் வேலைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு விட்டதாம்.
‘கொக்கி’, ‘மைனா’, ‘கும்கி’, ‘செம்பி’ ஆகிய படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். கொக்கி படத்தில் நடிகர் கரண் ஹீரோவாக அறிமுகமானார். ‘மைனா’ படத்தில் நடிகை அமலா பால் ஹீரோயினாக அறிமுகமானது நினைவிருக்கலாம். யானையை வைத்துப் படமாக்கியிருந்த ‘கும்கி’ நடிகர் விக்ரம் பிரபுவுக்கு நல்லதொரு பெயரைத் தந்ததெனச் சொல்லலாம்.
விஜய் ஶ்ரீஹரியை வைத்து இயக்கும் புதிய படமும் ‘கும்கி’ ஸ்டைலில் அமைந்த ஒரு கதைதானாம். யானைக்குப் பதில் சிங்கம் படத்தில் இடம் பிடிக்கிறதாம்.
படத்தில் நடிக்கவிருக்கும் சிங்கத்துக்கும் அதனுடன் நடிக்கவிருக்கும் ஶ்ரீஹரிக்குமே விசேஷ பயிற்சிகள் இருக்கிறதென்கிறார்கள்.