IND vs PAK: பேட்டிங் சொதப்புனாலும் பௌலிங் மிஸ்ஸே ஆகாது! – பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது எப்படி?

“டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்தியா இவ்வளவு சிறிய ஸ்கோரை டிஃபெண்ட் செய்ததே இல்லை. இந்திய பேட்டர்களை இந்திய பௌலர்கள் காப்பாற்றிவிட்டார்கள். இது பௌலர்களால் கிடைத்த வெற்றி!” – இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய சமயத்தில் வர்ணனையில் கவாஸ்கரின் குரல் இப்படித்தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்டு அழுத்தம் மிக்க ஒரு போட்டியில் இந்திய அணியின் பௌலர்கள் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருப்பது அணிக்கே பெரும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. இந்திய அணி எப்படி வென்றது? பாகிஸ்தான் எங்கேயெல்லாம் சறுக்கியது?

Rohit – Virat

டாஸை பாபர் அசாம் வென்று சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். ரோஹித் அப்போதே கொஞ்சம் அப்செட்தான். நாங்களும் முதலில் பந்துவீசி சேஸ் செய்யவே நினைத்தோம் என்றார். மழையால் போட்டி தாமதமாகத்தான் தொடங்கியது. ஒரு ஓவர் வீசிய பிறகு மீண்டும் மழை குறுக்கிட, சில நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி எப்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராக சிரமப்படுகிறார்களோ அப்போதெல்லாம் இந்திய அணியின் டாப் ஆர்டர் கடுமையாகச் சொதப்பியிருக்கும். இந்தப் போட்டியிலும் ரோஹித்தும் விராட் கோலியும் பவர்ப்ளேக்குள்ளாகவே அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர். இருவருமே அட்டாக் செய்யும் மோடில்தான் இருந்தனர். அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் பெரிய சிக்ஸரை அடித்திருந்தார்.

Pakistan

விராட்டும் கொஞ்சம் வேகமாக பேட்டைச் சுழற்றும் முனைப்பில்தான் இருந்தார். முதலில் விராட்தான் அவுட் ஆனார். நஸீம் ஷா வின் ஓவரில் கொஞ்சம் வெளியே சென்ற பந்துக்கு பேட்டை விட்டு கவர்ஸில் கேட்ச் ஆனார். 4 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ரோஹித்தும் விரைவாக வெளியேறினார். அப்ரிடியின் ஓவரிலேயே இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று ஸ்கொயரில் கேட்ச் ஆனார். இந்தியாவின் சரிவு தொடங்கியது. இந்த நியூயார்க் மைதானத்தில் 100 ரன்களை சேர்ப்பதே சிரமமாக இருப்பதால் இந்திய அணியின் இலக்கே 160 ரன்களை எடுத்தால் போதும் என்பதாகத்தான் இருந்திருக்கும். ரோஹித்தும் கோலியும் அவுட் ஆன பிறகு அந்த இலக்கு 140 ஆகக் கூட குறைத்திருக்கக்கூடும். ஆனால், அந்த 140 ரன்களை கூட எடுக்க முடியவில்லை என்பதுதான் சோகம்.

360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ் ஒன்றுமே செய்யவில்லை. சிக்ஸர் மணி சிவம் துபே 9 பந்துகளுக்கு 3 ரன்களை மட்டுமே அடித்தார். துணை கேப்டனாலும் ஒற்றை இலக்கத்தைத் தாண்ட முடியவில்லை. இடையில் கொஞ்சம் நன்றாக ஆடியது ரிஷப் பண்ட்டும் அக்சரும்தான். அக்சரை நம்பர் 4 இல் புரொமோட் செய்திருந்தார்கள். கொஞ்சம் நேரம் களத்தில் நின்று பண்ட்டுக்கு ஒத்துழைப்பு நல்கியிருந்தார். இந்தப் போட்டியில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த பேட்டர்களில் அக்சரும் ஒருவர். பண்ட்தான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. பேட்டை வாளாக வீசி வழக்கம்போல தன்னுடைய பாணியில் தாறுமாறாக ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார்.

Pant

பல கேட்ச் வாய்ப்புகளையும் கொடுத்தார். ஆனால், பாகிஸ்தான் கோட்டைவிட்டது. இறுதியில் ஆமிரின் பந்தில் 42 ரன்களில் பாபர் அசாமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருந்தார். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாருமே விக்கெட் எடுத்துவிட்டார்கள். இந்தியாவை 119 ரன்களுக்குள் சுருட்டிவிட்டார்கள். 100 ரன்களை சுற்றி அவுட் ஆகியிருக்க வேண்டிய இந்தியாவை சிராஜூம் அர்ஷ்தீப்பும் சேர்ந்து 119 ரன்களுக்கு அழைத்து சென்றனர்.

பாகிஸ்தானுக்கு 120 ரன்கள்தான் டார்கெட். என்னதான் கடினமான பிட்ச்சாக இருந்தாலும் பாகிஸ்தான் மாதிரியான அனுபவமிக்க ஒரு அணி வென்றே ஆக வேண்டிய போட்டி இது. ஆனாலும் பாகிஸ்தான் கோட்டைவிட்டிருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அசத்திவிட்டார்கள். பும்ரா இந்தத் தலைமுறையின் ஆகச்சிறந்த பௌலர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்கள் பாபர் அசாமும் ரிஸ்வானும்தான் அந்த அணியின் பெரிய பலம். அவர்கள் இருவரும் நின்றுவிட்டால் அந்த பார்ட்னர்ஷிப் மூலம் எந்த டார்கெட்டையும் அவர்களால் எளிதாக சேஸ் செய்ய முடியும். அந்த இருவரின் விக்கெட்டையுமே பும்ரா வீழ்த்திக் கொடுத்திருந்தார்.

Bumrah

தன்னுடைய முதல் ஸ்பெல்லில் 13 ரன்களில் இருந்த பாபர் அசாமை வீழ்த்தினார். இன்கம்மிங் டெலிவரியாக பும்ரா வீசிய பந்தை ஆடுவதா வேண்டாமா என்கிற தயக்கத்துடனேயே பேட்டை விட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனார் பாபர் அசாம். முகமது ரிஸ்வான் இன்னொரு பக்கம் நின்றுவிட்டார். நிறைய டாட்கள் ஆடினார். ஆனாலும் கடைசி வரை நின்றால் போட்டியை வென்றுவிடலாம் என்பதால் செட்டில் ஆகி நின்றுவிட்டார். அபாயகரமாக இருந்த அவரின் விக்கெட்டையும் பும்ராதான் வீழ்த்தினார். அந்த சமயத்தில் பாகிஸ்தான் அணி 14 ஓவர்களில் 80 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

போட்டி ஏறக்குறைய அவர்களின் கையில் இருப்பதைப் போல தோன்றியது. அப்போதுதான் பும்ரா கையில் பந்து சென்றது. கொஞ்சம் ஃபுல்லாக உள்நோக்கி வந்த பந்தை மடக்கி அடிக்க முயன்று தவறவிட்டு ஸ்டம்பை பறிகொடுத்தார் ரிஸ்வான். அங்கிருந்து போட்டி அப்படியே இந்தியா பக்கமாக திரும்பத் தொடங்கியது. மற்ற பௌலர்களும் பும்ராவுக்கு நன்றாக ஒத்துழைத்தனர். ஷார்ட் பந்துகளாக வீசி பகர் ஷமான் மற்றும் ஷதாப் கான் விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா எடுத்தார். ரிஸ்வானுடன் கொஞ்ச நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்த உஸ்மான் கானை அக்சர் படேல் வீழ்த்தினார். இமாத் வாசிமின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

Bumrah

இந்திய பந்துவீச்சு படையின் முன் பாகிஸ்தான் அணியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. 20 ஓவர்களில் 113 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. சந்தேகமே இல்லாமல் ஆட்டநாயகன் பும்ராதான்.

Team India

கவாஸ்கர் சொன்னதுபோல இந்திய பேட்டர்களை பௌலர்கள் இந்தப் போட்டியில் காப்பாற்றியிருக்கிறார்கள். ஒருவேளை இந்தப் போட்டியை இந்தியா தோற்றிருந்தால் இந்திய பேட்டர்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பார்கள். இந்திய அணியும் அடுத்த சுற்றுக்குச் செல்ல தடுமாறியிருக்கக்கூடும். இந்திய பௌலர்கள் இதையெல்லாம் நடக்கவிடாமல் செய்ததற்கே அவர்களுக்குத் தலை வணங்கலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.