India vs Pakistan: டி20 உலக கோப்பையில் மீண்டும் மோதும் இந்தியா – பாகிஸ்தான்?

India vs Pakistan: டி20 உலகக் கோப்பை 2024ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது. மேலும் நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட குரூப் நிலையில் இருந்தே வெளியேறும் சூழ்நிலையில் பாகிஸ்தான் உள்ளது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு சிறிது அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் 

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் விருப்பும் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் அடங்கும். 2024 டி20 உலக கோப்பைக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக பலரும் எதிர்பார்த்து இருந்தனர். நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இரு அணிகளும் வெற்றி பெரும் சூழலில் இருந்த இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் அற்புதமான பந்துவீச்சு இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

எளிதான இலக்கை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் ஆரம்பத்தில் நிதானமாக ஆடியது. 10 ஓவர்கள் வரை வெற்றி பாகிஸ்தான் பக்கம் தான் இருந்தது. ஆனால் பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தானை சிதறடித்தார். முக்கியமான விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து வெற்றியை இந்தியா வசப்படுத்தினார். 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தானை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களில் சுருட்ட உதவினார். இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 42 ரன்கள் எடுத்து இருந்தார். ஆனால் ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது. 

சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான்?

ஐசிசி போட்டிகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதால் இந்த ஆண்டு டி20 தொடரில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால், பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதே கேள்விக்குறி ஆகி உள்ளது. ஆனாலும், பாகிஸ்தானின் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்புகள் உள்ளன. குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அதில் சிறப்பான வெற்றியை பெரும் நிலையில் அவர்களுக்கு வாய்ப்புள்ளது. மேலும் அமெரிக்க அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும். இப்படி நடந்தால் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தேர்வாகும்.

பாகிஸ்தானின் மீதமுள்ள இரண்டு போட்டிகள் பின்வருமாறு:

ஜூன் 11 – பாகிஸ்தான் vs கனடா 
ஜூன் 16 – பாகிஸ்தான் vs அயர்லாந்து 

அமெரிக்காவின் மீதமுள்ள போட்டிகள்:

ஜூன் 12 – அமெரிக்கா vs இந்தியா 
ஜூன் 14 – அமெரிக்கா vs அயர்லாந்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.