தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வு நேற்று நடந்து முடிந்திருக்கிறது.
108 கிராம நிர்வாக அலுவலர்கள், 2,604 இளநிலை உதவியாளர்கள், 1,705 தட்டச்சர்கள், 445 சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 1177 காவலர்கள் உள்பட 6224 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வுக்கு கல்வித்தகுதி பத்தாம் வகுப்புத் தேர்ச்சி. ஆயினும் முதுநிலைப் பட்டதாரிகள், பொறியாளர்கள், முனைவர்கள் உட்பட 20,37,101 பேர் விண்ணப்பித்தார்கள். 15.8 லட்சம் பேர் எழுதினார்கள்.
குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி விகடனும், நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி நிறுவனமும் இணைந்து ஒரு கட்டணமில்லா ஆன்லைன் மாதிரித் தேர்வை நடத்தின. 35 நாள்கள் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 31 நாள்கள் வரை தினமும் 100 கேள்விகள் தரப்பட்டன. 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன. தேர்வின் முடிவில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காணவும் தவறான விடையெழுதிய கேள்விகளுக்கான சரியான விடையை மாணவர்கள் காணவும் வழிசெய்யப்பட்டிருந்தது. கடைசி நான்கு நாள்கள் 200 கேள்விகள், 180 நிமிடங்கள், 300 மதிப்பெண்கள் என முழுமையான மாதிரித் தேர்வாக நடத்தப்பட்டது.
மாணவர்கள் எழுதிய வினா விடைத் தாளை காணும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. தினமும் பல ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினார்கள். தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையங்களை நடத்தும் தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள், தேர்வுக்குத் தயாரான மாணவர்கள், “இந்த முன்னெடுப்பு மிகச்சிறப்பானது” என்றும், தேர்வு எழுதும் முறை எளிமையாக இருப்பதாகவும், தன்னம்பிக்கையை உருவாக்குவதாகவும், நேர நிர்வாகம் பழக உதவுவதாகவும் பாராட்டினார்கள்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு முதல் நாளான சனிக்கிழமை வரை இந்த மாதிரித் தேர்வு நடந்தது. “மாதிரித் தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகள் குரூப்-4 தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. இதில் 25 கேள்விகள் நேரடியாகவே வந்துள்ளன. 95 கேள்விகள் மறைமுகமாகக் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக,
“சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்து தோன்றிற்
புலனென மொழப புலன் உணர்ந்தோரே” – என்று
தொல்காப்பியரால் போற்றப்படும் சிற்றிலக்கியம் எது?’ என்ற கேள்வியெல்லாம் கடினமானவை. பெரும்பாலான மாணவர்களுக்கு இது புதிதாக இருக்கும். 15 லட்சம் பேர் எழுதிய தேர்வு என்பதால் ஒவ்வொரு மார்க்கும் 2 இடங்களுக்கு முன்னால் கொண்டு போய் விடுமளவுக்கு முக்கியமானது.
கல்வி விகடனும் நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த மாதிரித் தேர்வு எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளது…” என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் நடராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி நிறுவனத்தின் நிறுவனர் நடராஜ சுப்பிரமணியன்.
தேர்வெழுதிய அனைத்து மாணவர்களின் அரசுப்பணிக் கனவுகளும் நிறைவேற கல்வி விகடன் மனமார வாழ்த்துகிறது. மாணவர்களுக்கான இதுபோன்ற நற்பணிகளை கல்வி விகடன் தொடர்ந்து முன்னெடுக்கும்!