பரபரப்புடன் மீண்டும் தொடங்கவிருக்கிறது `விடா முயற்சி’ படப்பிடிப்பு.
படத்தின் மீதமுள்ள போர்ஷன்களை முடிக்க அஜித்திடம் ஆகஸ்ட் மாதத்தில் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது என்றும், படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடுகின்றனர் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இதனிடையே அஜித்தின் இன்னொரு படமான ‘குட் பேட் அக்லி’யின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது என்றும் தகவல்.

இந்தாண்டில் அஜித் ‘விடா முயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘விடா முயற்சி’யை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் எனப் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த கலவையாகப் படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் 50 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது என்றும், மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 35 நாள்களாவது தேவைப்படும் என்றும் பேச்சு இருக்கிறது.

இந்தப் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் ‘விடா முயற்சி’ தவிர ரஜினியின் ‘லால் சலாம்’, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’ மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ‘எம்புரான்’ ஆகிய படங்களை தயாரித்து வந்தது. லால் சலாம் ரிலீஸாகி விட்டது. கமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் முடிந்து இப்போது ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது.
இந்நிலையில்தான் ஒரே சமயத்தில் ஒரு படத்தில் மட்டும் கவனம் எடுத்து தயாரிக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. இதனால் ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் மட்டும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் அஜித், தனது கால்ஷீட்களை வீணடிக்க விரும்பாமல் அடுத்த படமான ‘கு.பே.அ’க்கு தன் கால்ஷீட்களை கொடுத்தார். அஜித்தின் 63வது படமான ‘குட் பேட் அக்லி’யை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

சென்ற மாதம் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமானது. செம மாஸான ஓப்பனிங் பாடல் ஷூட்டுடன் படப்பிடிப்பை ஆரம்பித்தனர். சுப்ரீம் சுந்தரின் மூவ்மெண்ட்ஸில் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் படமாக்கியுள்ளனர். இந்நிலையில்தான் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘விடா முயற்சி’யை மீண்டும் அஜர்பைஜானிலேயே தொடர்கின்றனர். இந்த ஜூன் மாத இறுதியிலோ அல்லது அதற்கு முன்னரோ ‘விடா முயற்சி’ குழு அஜர்பைஜான் கிளம்புகிறது. தொடர்ந்து சில வாரங்கள் அங்கே ஷூட்டிங் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து புனேவிலும் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. புனே ஷெட்யூலோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது என்றும் தீபாவளி ரிலீஸுக்கு டார்க்கெட் வைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். தவிர ‘குட் பேட் அக்லி’ பொங்கலுக்கு வெளியாகும் என்றும் படக்குழுவே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.