USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் ஒவ்வொன்றும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரை போல் இந்த ஆடுகளங்களிலும், சூழலிலும் 140 ரன்களை தொடுவதே மிக கடினமானதாக உள்ளது. அதுவும் இரண்டாம் பேட்டிங் செய்யும் அணிகள் வெறும் 115, 120 ரன்களை சேஸ் செய்யவே திணறுகின்றனர். அத்தகைய சூழலில், சிறிய அணி – பெரிய அணி என இல்லாமல் அனைத்து போட்டிகளும் சுவாரஸ்யமளிக்கும் ஒன்றாக உள்ளது.
குறிப்பாக, இன்று நடைபெற்றும் கனடா – பாகிஸ்தான் (CAN vs PAK Match) போட்டியும் அப்படியானதுதான். கனடா அணி அமெரிக்காவுக்கு எதிராக 190 ரன்களுக்கு மேல் அடித்த நிலையில், அதை டிபண்ட் செய்ய இயலாமல் தோற்றுப்போனது. இருப்பினும், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி அளித்தது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் இந்தியா உடன் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழலில் உள்ளன.
கனடா vs பாகிஸ்தான் போட்டி நிலவரம்
ஒருவேளை இன்றைய போட்டி மழையால் தடைப்பட்டால், பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறி, சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும். அதேபோலவே, அமெரிக்கா – இந்தியா (USA vs IND Match) அணிகளுக்கு இடையிலான போட்டியும் மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு இந்த குரூப்பில் இருந்து முதலாவதாக தேர்வாகும். தோல்வியடையும் அணி அதன் அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.
அமெரிக்கா vs இந்தியா பலப்பரீட்சை
இந்திய அணி (Team India) அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள நிலையில் அடுத்த இரு போட்டிகளும் அமெரிக்கா மற்றும் கனடா உடன் விளையாடுகிறது. அமெரிக்க அணி (Team America) கனடா மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது, அடுத்து இந்தியா மற்றும் அயர்லாந்து உடன் விளையாடுகிறது. இதில் இரு அணிகளும் சம வாய்ப்பு இருந்தாலும், இந்திய அணியின் சர்வதேச அனுபவம் என்பது நிகரற்றதாகும். சர்வதேச டி20 போட்டிகளில் அனுபவம் என்பது இரண்டாவதுபட்சம்தான், அணி வீரர்கள் போட்டி அன்று சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆட்டத்தை வெல்ல முடியும்.
முக்கிய வீரர்கள் யார் யார்?
அந்த வகையில், இந்திய அணியில் விராட் கோலி (Virat Kohli), ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) என முக்கிய வீரர்கள் அனைவரும் சொதப்பினால் அன்று வெற்றி பெறுவது கடினமாகிவிடும். அதேபோல், அமெரிக்க அணியின் முக்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடினால் அன்று அவர்களுக்கு வெற்றி எளிதாகிவிடும். எனவே, எந்த அணி வெல்லும் என்பதை கணிக்கவே இயலாது. ஆனால், இந்தியா போன்ற அணியை வீழ்த்த வேண்டும் என்றால் அமெரிக்க அணியில் இந்த மூன்று முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அத்தகைய வீரர்கள் யார் யார் என்பது குறித்து இதில் காணலாம்.
ஆரோன் ஜோன்ஸ்
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற முக்கிய காரணமாவர், ஆரோன் ஜோன்ஸ் (Aaron Jones). கனடா உடனான போட்டியில் அவர் 40 பந்துகளில் 94 ரன்களை அடித்து அமெரிக்காவை வெற்றி பெறச் செய்தார். பாகிஸ்தான் உடனான போட்டியில் 26 பந்துகளில் 36 ரன்களை எடுத்து, சூப்பர் ஓவரிலும் சிறப்பாக பேட்டிங் செய்து அந்த அணிக்கு கைக்கொடுத்தார். எனவே, நாளைய இந்தியா உடனான மோதலில் மிடில் ஓவர்களிலும், கடைசி கட்டத்திலும் அதிக தாக்கத்தை செலுத்தக் கூடியவர். இருப்பினும், இவர் பும்ராவின் உலகத்தர பந்துவீச்சை தாக்குப்பிடிப்பாரா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.
கோரே ஆண்டர்சன்
இவருக்கு இந்திய அணியும் புதிது கிடையாது, இந்திய அணி வீரர்களுக்கும் இவர் புதிது கிடையாது. நியூசிலாந்து அணியில் இருந்த போது கோரி ஆண்டர்சன் (Corey Anderson) இந்திய அணியை எதிர்த்து பல முறை பேட்டிங்கும் செய்திருக்கிறார், பந்தும் வீசியிருக்கிறார். எனவே, பேட்டிங், பௌலிங் இரண்டிலும் இந்திய அணிக்கு தலைவலியை கொடுக்க வல்லவர். இருப்பினும் இந்த தொடரில் அவர் பெரிதாக செயல்படவில்லை.
சௌரப் நேத்ரவல்கர்
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டில் விளையாடியவர்தான் சௌரப் நேத்ரவல்கர் (Saurabh Netravalkar). தற்போது அமெரிக்காவுக்கு குடியேறிவிட்ட இவர்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் ஹீரோவாக திகழ்ந்தார். இவரின் இடது கை வேகப்பந்துவீச்சு இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு பிரச்னயைாக அமையலாம். இவர் மட்டுமின்றி, அமெரிக்க அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் நோஸ்துஷ் கெஞ்சிகேவும் (Nosthush Kenjige) இந்திய பேட்டிங்கிற்கு பிரச்னையாக அமையலாம்.