புதுடெல்லி: நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை பாஜகவின் நாடாளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய், இம்முறை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 230 எம்பிக்களை இடைநீக்கம் செய்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றுள்ள நிலையில், அசாம் மாநில காங்கிரஸ் எம்பியும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கவுரவ் கோகாய் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முழு காலத்துக்கும் நீடிக்காது. மோடியின் தலைமைப் பாணி அவர் ஐந்தாண்டுகளை வெற்றிகரமாக முடிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
இலாகா ஒதுக்கீட்டில் தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளமும் கடுமையாக பேரம் பேசவில்லை என நான் நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் மிகவும் சாதுர்யமான அரசியல் தலைவர்கள். அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை காலம்தான் சொல்லும்.
எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்வது, தகுதி நீக்கம் செய்வது, அவர்களை வேட்டையாடுவது என தொடர்ந்து ஆளும் தரப்பு முயலும். இப்போது 230-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் எதிர்தரப்பில் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள், 230 எம்பிக்களை இடைநீக்கம் செய்வார்களா? அவர்களின் அணுகுமுறை மாறாது என்றபோதிலும், இம்முறை எதிர்க்கட்சிகள் வலிமையாக இருக்கின்றன. அதனால், ஆளும் கட்சி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமானால் நாங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். இதைத்தான் பொதுமக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் பொதுமக்கள் எங்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.