RC Renewal For Bikes: நீங்கள் பைக் வாங்கி 15 வருடங்கள் ஆகப் போகிறது அல்லது நீங்கள் செகண்ட் ஹாண்டில் வாங்கிய பைக்கின் மாடல் 15 வருடங்களை எட்டப் போகிறது என்றால் இது உங்களுக்கான செய்திதான். நீங்கள் உடனே உங்களின் RC புக்கில் நீங்களின் RC காலாவதியாக இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்பதை பாருங்கள். ஒருவேளை உங்கள் RC இன்னும் சில மாதங்களில் முடிவடையப் போகிறது என்றால் இந்த விஷயங்களை நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பதிவுச் சான்றிதழை ஆங்கிலத்தில் Registration Certificate என்றழைப்பார்கள். இது உங்கள் வாகனம் பதிவு செய்யப்படுவதற்கான சான்றிதழ் ஆகும். இது பைக் வாங்கும்போது முதன்முதலாக இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதன்பின், 15 ஆண்டுகளில் அந்த சான்றிதழ் காலாவதியாகிவிடும். நீங்கள் மீண்டும் உங்களின் RC-ஐ புதுப்பிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு பின் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்களின் RC-ஐ புதுப்பிக்க வேண்டும்.
RC-ஐ ஏன் புதுப்பிக்க வேண்டும்?
RC என்பது உங்கள் வாகனத்தின் அத்தியாவசிய சட்ட ஆவணமாகும், இது வாகனத்தின் பதிவு மற்றும் உங்களின் உரிமைக்கான சான்றாக பார்க்கப்படுகிறது. எனவே இதனை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கவில்லை என்றால் உங்களுக்கு போக்குவரத்து அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், இதில் வாகனத்தின் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸிஸ் எண்கள், உரிமையாளரின் விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் போன்ற முக்கிய விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த பதிவுச் சான்றிதழ் வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO) மூலம் வழங்கப்படுகிறது. இதனை புதுப்பிக்கவும் நீங்கள் RTO-விடம் செல்ல வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன, கட்டணங்கள் ஆகிய வழிமுறைகளை இங்கு காணலாம்.
RC Renewal: தேவையான ஆவணங்கள்
உங்களின் அசல் பதிவுச் சான்றிதழ், முறையாக பூர்த்தி செய்து கையொப்பமிடப்பட்ட படிவம் 25, வாகன காப்பீட்டு சான்றிதழ், மாசு கட்டுப்பாட்டின் கீழ் பெறப்பட்ட சான்றிதழ் (PUC), பான் கார்ட் நகல் அல்லது படிவம் 60 அல்லது படிவம் 61, வாகனத்தின் இன்ஜின் மற்றும் சேஸ் எண்ணின் பென்சில் அச்சு, வாகனத்தின் பிட்னஸ் சான்றிதழ் (FC), சாலை வரி செலுத்தியதற்கான சான்று, வாகன உரிமையாளரின் கையொப்ப அடையாளம், முகவரி சான்று, உங்கின் அடையாளச் சான்று ஆகிய ஆவணங்கள் RC-ஐ புதுப்பிக்க தேவைப்படும்.
RC Renewal: ஆன்லைனில் விண்ணபிப்பது எப்படி?
– Paarivahan Sewa இணையதளத்திற்குச் செல்லவும். மெனுவில் இருக்கும் “Online Services” என்பதைக் கிளிக் செய்யவும். அதில் காணப்படும் “Vehicle Related Services” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
– அதில், நீங்கள் வசிக்கும் மாநிலத்தைத் தேர்வு செய்யவும். வாகனங்களுக்கான RC புதுப்பிப்பை அனைத்து மாநிலங்களும் ஆன்லைன் மூலம் அனுமதிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். உதாரணத்திற்கு, மேற்கு வங்கத்தில் இந்த சேவையை நீங்கள் பெற முடியாது. தமிழ்நாட்டில் இதற்கு அனுமதி உள்ளது.
– உங்களுக்கு அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தைத் (RTO) தேர்ந்தெடுக்கவும். “Proceed” பட்டனை கிளிக் செய்யவும்.
– “Services” மெனுவின் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து, “RC Related Services” என்பதைக் கண்டறிந்து கிளிக் செய்யவும். குறிப்பாக “Registration Renewal” என்ற ஆப்ஷனை அதில் தேடுங்கள்.
– அதில் உங்கள் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணை வழங்கவும். அதில் “Verify Details” என்பதைக் கிளிக் செய்து விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும். இந்த மூலம் RC-ஐ புதுப்பிப்புக்கான விண்ணப்பம் முடிவடையும். மேலும், நீங்கள் அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றால், Offline முறையிலும் விண்ணப்பிக்கலாம். மொத்தமாக இந்த சேவைக்கு இருச் சக்கர வாகனங்களுக்கு ரூ.300 செலவாகும் என கூறப்படுகிறது. இருப்பினும், கட்டணங்களில் மாறுபாடுகள் இருக்கலாம்.