WWDC 2024 iOS 18 Latest News: ஆப்பிள் நிறுவனத்தின் Worldwide Developers Conference (WWDC) என்ற மாநாட்டிற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் வழக்கத்திற்கு வரும் மாற்றங்கள், முன்னேற்றங்கள், அப்டேட்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் தகவல் வெளியாகும். அந்த வகையில், இந்த ஆண்டின் WWDC மாநாட்டின் மீதும் ஏகோபித்த எதிர்பார்ப்புகள் இருந்தன.
குறிப்பாக, iOS 18 குறித்த அறிவிப்புகள் இந்த WWDC மாநாட்டில் வெளியாகும் என பேச்சுகள் வந்தன. அந்த வகையில் வெளியான தகவல்கள் தற்போது உண்மையாகி உள்ளது. இந்திய நேரப்படி ஜூன் 10ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இந்த மாநாடு தொடங்கியதில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், முதல் நாளான நேற்று ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் பயனர்களுக்கு iOS 18 Operating System-ஐ அறிமுகப்படுத்தியது. இதனால், ஐபோன் பயனர்கள் உச்சக் கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றன. இந்த மாநாடு வரும் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறும்.
எப்போது iOS 18 கிடைக்கும்?
இருப்பினும், iOS 18 அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்காது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, சில ஐபோன் மாடல்களில் மட்டுமே இந்த புதிய iOS 18 வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த iOS 18 பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில லேட்டஸ்ட் அப்டேட்களை காணலாம். வரும் வாரங்களில் எவ்வித பிரச்னையும் இல்லாத பீட்டா வெர்ஷன் வந்துவிடும் எனலாம். இருப்பினும், பொதுமக்களுக்கு வரும் 2024ஆம் செப்டம்பர் மாதமே iOS 18 செயல்பாட்டிற்கு வரும். அப்போதுதான் ஐபோன் 16 சீரிஸ் சந்தையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.