சர்வதேச ஈரநிலப் பூங்கா ஒன்றியத்தின் பங்களிப்புடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசியாவின் முதல் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பத்தரமுல்லை தியசரு பூங்காவில் நடைபெறவுள்ளது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்தா தெரிவித்தார்.
இந்த மாநாடு குறித்த தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஈர நிலப் பூங்காக்களில் இருந்து சுமார் 100 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். இலங்கை, கொரியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியான்மார், நியூசிலாந்து, நேபாளம், ஜப்பான், அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், தாய்வான், இங்கிலாந்து ஆகிய 15 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கின்றன.
‘சூழலுக்கு உகந்த சுற்றுலாவுக்கான ஈரநிலங்கள் மற்றும் ஈரநில மையங்கள்’ என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும். ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான நிர்வாகத்தில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் மேம்படுத்துவதும் மாநாட்டின் நோக்கமாகும்.
ஈர நிலங்களைப் பாதுகாத்தல், அதனுடன் தொடர்புடைய பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழலில் சமநிலையை உருவாக்குதல் போன்றவற்றுக்கு முன்மாதிரி நாடாக இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பரஸ்பர அறிவைப் பரிமாறிக் கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் அமைச்சின் செயலாளர் மேதலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தரிவித்த மேல் மாகாண சுற்றுலா சபையின் தலைவர் சுகத்ஹேவா பத்திரன,
இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், பல்லுயிர் பெருக்கத்துடன் நிலையான வளர்ச்சியை நோக்கிச் செயல்படுவதற்கும் பெரும் செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது. இந்த ஈர நிலங்கள் மூலம் சுற்றுலாத்துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அறிய வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் நாங்கள் முழு அனுசரணையை வழங்குகிறோம். மேல் மாகாணத்தில் உள்ள சுற்றுலா வலயங்களை பல்வகைப்படுத்தியுள்ளோம். அதன் மூலம் அன்னியச் செலாவணி நெருக்கடிக்குத் தீர்வைக் கொண்டு வரலாம் என்பது எமது நம்பிக்கை. அந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலம், எமது நாட்டின் ஈரநிலங்களைப் பற்றி உலகுக்கு அறியச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
அத்துடன், நிலையான சுற்றுலா அபிவிருத்தி தலங்கள் என்ற புதிய கருத்துரு தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றது. இலங்கையில் முதன்முறையாக சீகிரிய பிரதேசத்தை சுற்றி இது அமுல்படுத்தப்படவுள்ளது. இது எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது அவிசாவளை சீதாவக்க பிரதேசத்தில் இருந்து புகையிரதத்தில் வரும் ஊடகவியலாளர்கள் அப்பகுதியிலுள்ள தாவரவியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் மேல்மாகாண சுற்றுலா சபையின் தலைவர் சுகத் ஹேவாபத்திரன மேலும் தெரிவித்தார்.