திருநெல்வேலி: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24-ம் தேதி தொடங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால் பேரவைக் கூட்டத் தொடர் 20-ம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு தற்போது அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேரவை கூட்டுத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20-ம் தேதி தொடங்கும். நாளை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்கிறார். பேரவை அலுவலகத்தில் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தை பொறுத்தவரை தொழிலாளர்களின் நலன் குறித்து இந்த அரசு நல்ல முடிவை எடுக்கும். தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக திமுக போராட்டத்தில் பங்கேற்றது. ஆனால் தற்போது சம்பளம் பிரச்சினை இல்லை. பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வனப்பகுதியில் நமது தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே வனத்திற்கும் நல்லது நமக்கும் நல்லது.
கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வந்தது. ஆகையால் தொழிலாளர்கள் அங்கு இருப்பது தான் நமக்கும் நல்லது இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவாக தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்த முடிவெடுக்க வேண்டும். முழுமையாக மாஞ்சோலை தேயில தோட்டத்துப் பகுதிகளை வனத்துறையிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது.
அந்த வனப்பகுதி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அங்கே தொடர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பை வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாஞ்சோலை விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். அங்கு தொழிலாளர்களுக்கு குடிநீர் மின்சாரம் இணைப்பை துண்டிக்க முடியாது. அப்படி துண்டித்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாடு அரசு சாமானிய மக்களுக்கு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை நிவர்த்தி செய்யும் மத்திய அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்க்காமல் தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்வதற்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் பக்தர்கள் செல்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது” என்றார்.