ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய்க்கு பந்தயம் நடந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் ஏலூரு மாவட்டம், நூஜிவேடு மண்டலம், தூர்ப்பு திகுபல்லி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் ரெட்டி (52). இவர் 7-வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினர். இவரது மனைவி விஜயலட்சுமி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இருவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள்.
இந்நிலையில் ஜெகன்மோகன் தான் மீண்டும் ஆந்திர முதல்வர் ஆவார் என வேணுகோபால் ரெட்டி ரூ.30 கோடி வரை பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெகன் கட்சி படு தோல்வியை நோக்கிச் சென்றதால் வேணுகோபாலிடம் பந்தயம் கட்டியவர்கள் பணம் கேட்கத் தொடங்கினர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அவரை செல்போனினும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலர், வேணுகோபாலின் வீட்டுக்குசென்று, அங்கிருந்த ஏசி, டிவி,சோஃபா, பைக் போன்ற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய வேணுகோபால் வீட்டின் நிலைமையை பார்த்து வேதனை அடைந்தார். மேலும் பந்தயப் பணத்தை தரும்படி பலர் கேட்டதால் கடும் நெருக்கடிக்கு ஆளானார். இதனால் வேணுகோபால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்று, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடலை ஏலூரு போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.