தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பூதலூரில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷனில் ஆந்திராவைச் சேர்ந்த திலீப்பும் (26) அவரது மனைவி ஷோபாவும் (21) கீ செயின் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களது 5 மாத கைக்குழந்தையின் பெயர் மணிகண்டா.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பூதலூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் இருவரும் குழந்தையுடன் படுத்து உறங்கி உள்ளனர். இன்று அதிகாலை 3:30 மணி அளவில் எழுந்து பார்த்தபோது, அருகில் படுக்க வைத்திருந்த குழந்தை மணிகண்டாவை காணவில்லை.
இதனால் பதறிபோன கணவனும் மனைவியும் அந்தப் பகுதிகளில் குழந்தையைத் தேடி அலைந்திருக்கிறார்கள். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காதால் உடனடியாக இது குறித்து பூதலூர் போலீஸில் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் சரவணன், தனசேகரன், தியானேஸ்வரன் ஆகியோர் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது ஸ்டேஷனுக்கு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் குழந்தை எந்தவித பாதிப்பும் இன்றி கிடந்துள்ளது. உடனடியாக அந்தக் குழந்தையை மீட்டு அதன் பெற்றோரிடம் காலை 6 மணி அளவில் போலீஸார் ஒப்டைத்தனர்.
குழந்தையை யார் தூக்கிச் சென்றார்கள், அப்படித் தூக்கிச் சென்றவர்கள் எதற்காக அந்த இடத்தில் போட்டுவிட்டுப் போனார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேசமயம், குழந்தை காணாமல் போன 2 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அந்தக் குழந்தையை மீட்டுக்கொடுத்த போலீஸாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.