சென்னை: இந்திய சந்தையில் புதிய ஃப்யூச்சர் போன் மாடலான நோக்கியா 3210 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம். இந்த போனில் யூடியூப் மற்றும் யுபிஐ போன்ற அம்சங்களை பயனர்கள் பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நோக்கியா 3210 4ஜி போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
இந்திய ஃப்யூச்சர் போன் பயனர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற போன்களில் நோக்கியாவுக்கு தனியிடம் உண்டு. கடந்த 2001 காலக்கட்டத்தில் இந்தியாவில் போன் பயன்பாடு பரவலாக தொடங்கிய நேரத்தில் பெரும்பாலான இந்தியர்கள் ‘ஹலோ’ சொன்னதும் நோக்கியா போனுடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கால ஓட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் வரவு அதனை மடைமாற்றியது.
சிறப்பு அம்சங்கள்: மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. யூனிசாக் டி107 சிப்செட், 64எம்பி ரேம், 128எம்பி ஸ்டோரேஜ், 2.4 இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே, டைப்-சி சார்ஜிங் போர்ட், 1,450mAh பேட்டரி, 2 மெகாபிக்சல் கேமரா, பில்ட்-இன் யுபிஐ பயன்பாடு, கிளவுட் ஆப்ஸ் மூலம் யூடியூப் போன்ற செயலிகளையும் இதில் பயன்படுத்தலாம்.
கிளாசிக் டி9 கீபோர்டு கொண்டுள்ளது. நோக்கியாவின் அடையாளங்களில் ஒன்றான ‘ஸ்நேக்’ கேமும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.3,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஹெச்.எம்.டி நிறுவன வலைதளத்தில் நேரடியாக இந்த போனை பயனர்கள் வாங்கலாம்.