புவனேஸ்வர்,
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியமைத்து இருந்த பிஜூ ஜனதாதளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதேநேரம் பா.ஜனதா கட்சி, சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 147 சட்டசபை இடங்களில் 78 தொகுதிகளிலும், 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களையும் கைப்பற்றியது.
தற்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து, ஒடிசாவிலும் புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளை அந்த கட்சி முடுக்கி விட்டு உள்ளது.
அதன்படி மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்வதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் சட்டசபை கட்சித்தலைவரை (முதல்-மந்திரி) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்கிறார்கள். சுரேஷ் பூஜாரி எம்.எல்.ஏ, மாநில பா.ஜனதா தலைவர் மன்மோகன் சமல், கே.வி.சிங், மோகன் மஜி ஆகியோரின் பெயர்கள் புதிய முதல்-மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன.
ஒடிசாவின் புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுவதை தொடர்ந்து, புதிய அரசின் பதவியேற்பு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
முன்னதாக ஜெயதேவ் விகாரில் இருந்து பதவியேற்பு விழா நடைபெறும் மைதானம் வரை பிரதமர் மோடி வாகன பேரணி நடத்துகிறார். அப்போது அவர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.