விராட் கோலி இல்லை… இனி அதிரடி ஓப்பனர் இவர்தான் – இந்திய அணிக்கு வெற்றி தொடரும்!

USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும். தற்போது குரூப் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பரபரப்பாக செல்வதற்கு முக்கிய காரணம் பெரிய அணி, கத்துக்குட்டி அணி என்றில்லாமல் அனைத்து அணிகளுமே பொதுவான சூழலில், ஏறத்தாழ சம பலத்துடன் மோதுகின்றன. 

தற்போதைய சூழலில் தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா (Team India) போன்ற அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மறுபுறம், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் சற்று மங்கியுள்ளது எனலாம். அதே நேரத்தில், அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிட கடுமையாக மோதி வருகின்றன.

இன்று பரபரப்பான பாகிஸ்தான் போட்டி

குரூப் சுற்று போட்டிகளே இப்படி பரபரப்பாக நடக்கிறது என்றால் சூப்பர் 8 மற்றும் நாக்அவுட் சுற்று போட்டிகள் அனல் தெறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், தினந்தோறும் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது, ஒவ்வொரு போட்டியும் இறுதிக்கட்டம் வரை சென்று த்ரில்லராக அமைகிறது. அந்த வகையில், இன்று ஒரே ஒரு போட்டி மட்டும் நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தான் அணி, கனடா அணியை (CAN vs PAK Match) சந்திக்கிறது, இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விகளை சரிக்கட்ட பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்று, நெட் ரன்ரேட்டை அதிகம் வைத்திருக்க வேண்டும்.

அமெரிக்கா vs இந்தியா: எங்கு, எப்போது பார்ப்பது?

இந்நிலையில், குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா – இந்தியா அணிகள் (USA vs IND Match) மோதும் போட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 12) நடைபெறுகிறது. அமெரிக்காவில் காலையில் நடக்கும் இந்த போட்டியை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நீங்கள் நேரலையில் காணலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனிலும், ஓடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த போட்டியை நீங்கள் நேரலையில் காணலாம்.

முதலில் தகுதிப்பெறப்போவது யார்?

இரு அணிகளும் தங்களின் முதலிரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளையும், அமெரிக்க அணி (Team USA) கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகளையும் வீழ்த்தி முறையே முதலிரண்டு இடங்களை புள்ளிப்பட்டியலில் பிடித்துள்ளன. எனவே, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் எனலாம். தோல்வியடையும் அணிக்கும் இன்னொரு வாய்ப்பு இருக்கும், அதன் கடைசி போட்டியில் அந்த அணிகள் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். இந்திய அணிக்கு இந்த போட்டிக்கு பின் கனடா உடனும், அமெரிக்காவுக்கு அயர்லாந்துடனும் போட்டி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எனவே, குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர 8 சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. குறிப்பாக, கத்துக்குட்டி என கருதப்பட்ட அமெரிக்க அணி மிகவும் பலமான அணியாக உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய அமெரிக்க அணி, இந்த தொடரில் அடுத்தடுத்து வெற்றி பெற்று சிறப்பான அணியாக உருவாகி உள்ளது. 

இந்திய அணியின் முக்கிய பிரச்னை

பலமான அமெரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்த வேண்டும் என்பது இந்திய அணியின் குறிக்கோளாக இருக்கும். இந்திய அணியில் தரமான பேட்டிங் மற்றும் பௌலிங் யூனிட்டை வைத்திருந்தாலும் சில சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதில் தற்போது முக்கியமான ஒன்று இந்திய அணியின் ஓப்பனிங் பிரச்னை. தற்போது இந்திய அணியின் ஓப்பனர்களாக ரோஹித் சர்மா – விராட் கோலி ஜோடி களமிறங்கும் நிலையில் கடந்த இரண்டு போட்டிகளாக அது பெரிதாக எடுபடவில்லை. இந்த இதற்கு முன் டி20இல் ஓப்பனிங்கிலும் இறங்கியது இல்லை. 

ஏன் ஜெய்ஸ்வால் தேவையில்லை?

அப்படியான சூழலில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை (Yashasvi Jaiswal) நீங்கள் பிளேயிங் லெவனுக்கு கொண்டு வர வேண்டும் என குரல்கள் எழுகின்றன. ஆனால், அவரை சேர்க்கும்போது பேட்டிங் காம்பினேஷன் இன்னும் சிக்கல் ஆகும். விராட் கோலியை 3வது வீரராக இறக்கினால் ரிஷப் பண்ட் 4ஆவது வீரராகதான் இறங்குவார். சூர்யகுமாரோ இன்னும் கீழே போவார் என்பதால் ஜெய்ஸ்வாலை சேர்ப்பதற்கு பதில் வேறொரு ஐடியாவை இந்தியா பயன்படுத்தலாம்.

ஓப்பனிங்கில் ரிஷப் பண்ட்

அதாவது, மூன்றாவது வீரராக இறங்கும் ரிஷப் பண்டை (Rishabh Pant) ஓப்பனிங்கிலும், ஓப்பனிங்கில் இறங்கும் விராட் கோலியை மூன்றாவது வீரராக இறக்கினாலே போதுமானது. பேட்டிங் ஆர்டரிலும் சிக்கல் வராது, பேட்டர்களின் ஃபார்மிலும் பிரச்னை வராது. நியூ பாலை சந்திப்பதில் ரிஷப் பண்டுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்பதற்கு கடந்த இரு போட்டிகளே சாட்சி, அவர் தனது U19 காலத்திலேயே ஓப்பனிங்கில்தான் இறங்கினார். மேலும், அவுட்பீல்டில் வெறும் 2 வீரர்களை மட்டும் வைத்து நீங்கள் ரிஷப் பண்டிற்கு பந்துவீசினால் அவர் எவ்வளவு அபாயகரமானவர் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அதேபோல், ஓப்பனிங்கில் வலது – இடது காம்பினேஷனும் பக்காவாக அமையும்.

ஏன் நம்பர் 3இல் விராட் கோலி?

அதேநேரத்தில், நியூயார்க் போன்ற அமெரிக்க பிட்ச்களில் விராட் கோலியின் (Virat Kohli) இயல்பான ஆட்டம் பெரியளவில் இந்திய அணியின் வெற்றிக்கு கைக்கொடுக்கும். அதிரடியாக விளையாடாமல், பார்த்து பக்குவமாக விளையாடும் விராட் கோலியே இந்திய அணிக்கு இத்தனை ஆண்டு காலமாக ஹீரோவாக இருந்திருக்கிறார். இது வெறும் 2 போட்டிகளை பார்த்து கூறுவது என்றில்லை. ஐபிஎல் தொடரின் சூழல் வேறு, தற்போதைய சூழல் வேறு. எனவே, சூழலை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப பேட்டிங் ஆர்டரை வைத்திருப்பதே இந்திய அணிக்கு கோப்பையை வென்று தரும். ரோஹித் – ராகுல் (Rohit Sharma – Rahul Dravid) ஆகியோர் இதுகுறித்து விரைந்து முடிவெடுப்பார்களா… விராட் கோலி இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா… என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.