சேலம்: சேலம்- விருத்தாசலம், சேலம்- கரூர், ஈரோடு- மேட்டூர், கோவை- மேட்டுப்பாளையம் உள்பட சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 13 பயணிகள் ரயில்கள், கரோனா காலத்தில் வழங்கப்பட்ட சிறப்பு எண்களுக்கு மாற்றாக, ஜூலை 1-ம் தேதியில் இருந்து மீண்டும் பழைய எண்களிலேயே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காலத்தில், பொதுப் போக்குவரத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், பயணிகள் ரயில்கள் யாவும், சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு, சிறப்பு எண்களுடனும், சிறப்பு கட்டணத்துடனும் இயக்கப்பட்டன.
இதனால், பயணிகளின் ரயிலுக்கு இருந்த சாதாரண கட்டணம் உயர்த்தப்பட்டு, கடந்த சில மாதங்கள் வரை, சிறப்புக் கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, பயணிகள் ரயில்களில், உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்பட்டு, முந்தைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்களுக்கு, சிறப்பு எண்கள் ரத்து செய்யப்பட்டு, ஜூலை 1-ம் தேதியில் இருந்து, பழைய எண்களிலேயே அந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, ஈரோடு- மேட்டூர் அணை (சிறப்பு எண்.06407) பழைய எண்.56103, மேட்டூர் அணை- ஈரோடு (சி.எண்- 06408) பழைய எண்- 56104, திருச்சி- ஈரோடு (சி.எண்-06809) பழைய எண்- 56105, ஈரோடு- திருச்சி (சி.எண்- 06810) பழைய எண்- 56106, ஜோலார்பேட்டை- ஈரோடு (சி.எண்- 06411) பழைய எண்- 56107, ஈரோடு- ஜோலார்பேட்டை (சி.எண்- 06412) பழைய எண்- 56108, திருச்சி- ஈரோடு (சி.எண்- 06611) பழைய எண்- 56809, ஈரோடு- திருச்சி (சி.எண்- 06612) பழைய எண்- 56810 என நடைமுறைக்கு வரவுள்ளது.
இதேபோல், ஈரோடு- ஜோலார்பேட்டை (சி.எண்-06846) பழைய எண்-56812, ஜோலார்பேட்டை- ஈரோடு (சி.எண்-06845) பழைய எண்- 56811, ஈரோடு- கோவை (சி.எண்-06801) பழைய எண்-66601, கோவை- ஈரோடு (சி.எண்-06800) பழைய எண்- 66602, ஈரோடு- பாலக்காடு டவுன் (சி.எண்- 06819) பழைய எண்-66607), பாலக்காடு டவுன்- ஈரோடு (சி.எண்-06818) பழைய எண்-66608 என நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும், கடலூர்- சேலம் (சி.எண்-06121) பழைய எண்- 76813, சேலம்- கடலூர் (சி.எண்-06122) பழைய எண்- 76814, சேலம்- விருத்தாசலம் (சி.எண்- 06896) பழைய எண்- 76816, விருத்தாசலம்- சேலம் (சி.எண்- 06895) பழைய எண்- 76815, சேலம்- கரூர் (சி.எண்-06831) பழைய எண்- 76821, கரூர்- சேலம் (சி.எண்-06836) பழைய எண்- 76822 உள்பட 13 பயணிகள் ரயில்களுக்கு, மீண்டும் பழைய எண்களே வழங்கப்பட்டுள்ளன. இவை ஜூலை 1-ம் தேதி முதல் பழைய எண்களில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.