புதுடெல்லி: டெல்லி அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு இணங்க பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பெண்களுக்கு மாதம்தோறும் நிதி உதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்ற திட்டம் டெல்லியிலும் அமல்படுத்தப்படும் என்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 2024-25 பட்ஜெட்டின்போது வாக்குறுதி அளித்தது.
இத்திட்டத்தின்படி, வரி செலுத்துவோர், அரசு ஓய்வூதியம் பெறுவோர், அரசுப் பணியாளர்கள் தவிர்த்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாதம்தோறும் ரூ. 2,000 ஆயிரம் கோடி செலவாகும் இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதனால், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்பட ஏராளமான பெண்கள் இனி தங்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். எனினும், திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு தாமதமாகி வந்த நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இந்த வாக்குறுதியை ஆம் ஆத்மி அளித்தது.
தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால், ஏற்கனவே அறிவித்தபடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசை வலியுறுத்தி பெண்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய ஒரு பெண், “டெல்லியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள டெல்லி அரசு உயர் அதிகாரி ஒருவர், “இதுபோன்ற மிகப் பெரிய திட்டங்களை அமல்படுத்துவது என்றால் அதற்கென்று நடைமுறைகள் இருக்கின்றன. இது போன்ற எந்த பெரிய திட்டத்துக்கும் சம்பந்தப்பட்ட துறை, நிதித்துறை மூலம் ஒரு வரைவு திட்டத்தை உருவாக்கும். பின்னர் அது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பிறகு, கோப்பு துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு பின்னர் செயல்படுத்தப்படும். முதல்வரின் தலைமையில் அமைச்சரவை உள்ளது. ஆனால், முதல்வர் சிறையில் இருப்பதால், ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால், பல கோப்புகள் நிலுவையில் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.