கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்மதியோன். சமூக ஆர்வலரான இவர், நுகர்வோர் உரிமைகள் தொடர்பாகவும் குரல் கொடுத்து வருகிறார். கடந்த 1996ம் ஆண்டு தனது வீட்டுக்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காக கதிர்மதியோன் மின்சார வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அதிகாரி ரூ.500 ரூபாய் கேட்டுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாரளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தல்படி, நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு 50 ரூபாய் நோட்டுகளை ரசாயனம் தடவி அதிகாரியிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அதிகாரியை கையும் களவுமாக கைது செய்தனர்.
வழக்கில் சாட்சியமாக கொடுக்கப்பட்ட ரூ.500 பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்திலும் இந்த வழக்கு கடந்த 2001-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருந்தபோதும், கதிர்மதியோன் கொடுத்த ரூ.500 பணம் அவருக்கு திரும்பி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அவர் 2007-ம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு பலமுறை விசாரிக்கப்பட்ட நிலையில், கதிர்மதியோனை நீதிமன்றத்தில் ஆஜராகி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜரான கதிர்மதியோனிடம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.500 பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கதிர்மதியோன் கூறுகையில், ”28 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் திரும்ப கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த தாமதம் சற்றே கவலையளிக்கிறது. பணம் கொடுத்த விவகாரத்தை நானே மறந்துவிட்டேன். லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க பெரும்பாலானவர்களும் தயங்குவதற்கு இதுவே காரணமாக அமைந்து விடுகிறது.
தங்கள் சொந்தப் பணத்தை கொடுத்துவிட்டு, அதனை திரும்பப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நான் லஞ்சமாக கொடுத்து திரும்பி வழங்கப்பட்டுள்ள இது பழைய ரூபாய் நோட்டுகள். தற்போது இது புழக்கத்தில் இல்லை. இதை மாற்ற வேண்டும் என்றால் கூட வங்கிக்கு செல்ல வேண்டும்.
நான் அதை செய்யப் போவதில்லை. என் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த நீதி. எனவே இந்தப் பணத்தை என்னுடைய முயற்சிகளுக்கான நினைவாக பாதுகாக்கப் போகிறேன்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88