புதுடெல்லி: தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்தமக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 293 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது
இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின்பிரதமராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இதற்காக, மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் பாஜகவெற்றி பெற்று 6 நாட்களுக்குப் பிறகு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜஹ்ரா பலூச் கூறுகையில், “இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் எப்போதும் நல்லுறவையே விரும்புகிறது.
ஜம்மு காஷ்மீர்பிரச்சினை உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையை தொடங்க தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார்.
ஆனால், தீவிரவாதம் இல்லாத சூழலை உருவாக்கினால் மட்டுமே சுமூக உறவை தொடர முடியும் என பாகிஸ்தானிடம் இந்தியா ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.