காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தனது 100-வது வயதில் தன் காதலியை கரம்பிடித்திருக்கிறார், இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ வீரர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை சேர்ந்தவர் ஹரோல்ட் டெரன்ஸ். இவர், அமெரிக்காவின் ராணுவ விமானப்படையில் படை வீரராகப் பணியாற்றியவர்.
இரண்டாம் உலகப்போரின்போது, ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பிய போர் விமானங்களைப் பழுது பார்க்கும் பணியையும் செய்தவர். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களில் உயிருடன் இருக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர். இவர் தன் காதலியான, 96 வயதாகும், ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஜீன் ஸ்வெர்லின் என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார்.
ஃபிரான்ஸ் நாட்டின் டி-டே கடற்கரையில், பொதுமக்கள், உறவினர்கள் புடை சூழ, கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி இந்தத் தம்பதி திருமணம் செய்துகொண்டனர்.
இது குறித்து ஹரோல்ட் டெரன்ஸ் கூறுகையில், “எங்கள் திருமணம் இங்குதான் நடைபெற வேண்டும் என என் நண்பர் ஒருவர்தான் பரிந்துரை செய்தார். டி-டே கடற்கரை, நான் பணியில் இருந்தபோது எனக்கு பல்வேறு மறக்க முடியாத நினைவுகளைத் தந்த இடம். இதே இடத்தில் என் காதலியைக் கரம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் வாழ்வின் ஓர் உணர்ச்சிபூர்வமான தருணம்” என்றார்.
மேலும், அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கவும், உலக அமைதிக்காகவும், உக்ரைன் மற்றும் காசாவில் போர் முடிவுக்கு வரவும் இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.
இத்திருமணம் குறித்துப் பேசிய அந்நகரின் மேயர், “இவர்களது திருமணம் காதலுக்கு அழிவில்லை என்பதை உணர்த்துகிறது. இந்நாட்டு சட்டத்தின்படி வேறு நாட்டினர் திருமணம் செய்தால் சட்டப்படி பதிவுசெய்ய இயலாது. இவர்கள் ஃபுளோரிடா சென்ற பின் திருமணத்தை பதிவுசெய்ய முயற்சி மேற்கொள்ளலாம். இருவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டெரன்ஸ், தெல்மா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். 70 ஆண்டுக்கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2018-ம் ஆண்டு தெல்மா உயிரிழந்தார்.
ஸ்வெர்லினும் கணவரை இழந்தவர். 2021-ம் ஆண்டு நண்பர் ஒருவர் ஸ்வெர்லினை டெரன்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகத்துக்குப் பிறகு காதலில் விழுந்த அவர்கள் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.