இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பழைய காலத்தை போல் யாராலும் அடிக்கடி பார்க்க முடிவதில்லை. இருநாட்டு தொடர்கள் நடப்பதே இல்லை. குறிப்பாக, 2007ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிதான் இரு அணிகளும் சேர்ந்து விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும். எனவே, சச்சின் – சோயிப் அக்தர் போல் பும்ரா – பாபர், விராட் கோலி – அமீர் உள்ளிட்ட உலகத் தர பேட்டர் – பௌலர்களின் மோதலை காண்பது மிக அரிதாகிவிட்டது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே தற்போது நடைபெறுகின்றன. ஆசிய கோப்பை தொடர்களிலும் இரு அணிகள் மோதும். இப்படியான சூழலில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை காண முடியும் என்பதால் ரசிகர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுகிறது. அந்த வகையில் கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்றது. அதேபோல், அடுத்தாண்டு பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா, பங்கேற்காதா என்ற கேள்வியும் எழுகிறது.
பாகிஸ்தான் படுதோல்வி
இதற்கு மத்தியில்தான் தற்போது நடைபெற்று வரும் ஆசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியும் அதே எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதுவரை டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒருமுறை மட்டுமே பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது (2021 தொடர்). மற்ற 7 போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. ஐசிசி உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதே இல்லை எனலாம்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…
பாகிஸ்தானிலும் இந்த போட்டியை பல நூறு கிரிக்கெட் ரசிகர்கள் பொது இடங்களில் கண்டு களிப்பதை தொலைக்காட்சி நேரலையில் பார்க்க முடிந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்திய போது, ரவில்பிண்டியில் பெரிய திரையின் முன் போட்டியை கண்டு வந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகளையும் காண முடிந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியைடந்தது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது எனலாம். மைதானத்தில் பார்வையாளர்கள் தரப்பில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்களும் கூட மிகுந்த கவலை தொய்ந்த முகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியறியதை காண முடிந்தது.
பாகிஸ்தான் யூ-ட்யூபர் சுட்டுக்கொலை
இந்நிலையில், பாகிஸ்தான் ரசிகர்கள் மேலும் ஒரு சோக சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு யூ-ட்யூபர் நியூயார்க் வந்துள்ளார். அவர் தனது யூ-ட்யூப் சேனலுக்காக இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்த மக்களின் எதிர்பார்ப்பை பதிவு செய்யும் பொருட்டு பலரிடமும் மைக் மூலம் கருத்துக் கேட்டு வந்துள்ளார். அப்போது நியூயார்க்கில் உள்ள மொபைல் மார்கெட்டில் மக்களிடம் கருத்துக்கேட்டு வந்த போது, அங்கிருந்த ஒரு பாதுகாப்பு காவலாளி ஒருவரால் அந்த யூ-ட்யூபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சாத் அகமது என்ற யூ-ட்யூபர் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண நியூயார்க் வந்துள்ளார். அவரின் குடும்பமே இவரை நம்பித்தான் இருக்கிறது. பிரபல யூ-ட்யூபரான இவர் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது நியூயார்க்கின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது பதிவு செய்து அதனை தனது யூ-ட்யூப் பக்கத்தில் வீடியோவாக போட திட்டமிட்டுள்ளார். இதனால் பலரையும் சந்தித்து அவர் பேட்டியெடுத்துள்ளார். அப்போது, மொபைல் மார்க்கெட்டில் பாதுகாப்பு காவலாளி ஒருவரிடமு் சாத் பேட்டியெடுக்க முயன்றுள்ளார்.
காரணம் என்ன?
ஆனால், அந்த காவலாளி அதனை வேண்டாம் என்று கூறி தவிர்த்துள்ளார், இருப்பினும் தொடர்ந்து கேமராவில் படமெடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியை வைத்து அவரை சுட்டுள்ளார். உடனடியாக சாத் அகமதை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சாத் அகமது அந்த காவலாளியிடம் பேசி வருகிறார். பேசிக்கொண்டிருக்கும் போதே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த பாதுகாப்பு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த காவலாளி கூறுகையில்,”அவர் என் முகத்திற்கு நேராக மைக்கை நீட்டி, தொடர்ந்து வீடியோ எடுத்து வந்தார். எனக்கு கோபம் வந்து, அவரை சுட்டுவிட்டேன்” என்றார். இது ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.