மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் (NEET) தேர்வின் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்டது. இதில், நீட் தேர்வு வரலாற்றில் முதல்முறையாக 67 மாணவர்கள் 720-க்கு 720 பெற்றது, அதில் 8 பேர் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியது, பலருக்கு 719, 718 போன்ற மதிப்பெண்கள் வழங்கியிருப்பது தெரியவந்தது.
இதனால், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் மோசடி என இந்த நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், மோசடி நடந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தேசிய தேர்வு முகமை மறுத்தது. இந்த நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்யுமாறும், புதிதாக தேர்வு நடத்துமாறும் தாக்கல்செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, “தேர்வின் புனிதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்குப் பதில் வேண்டும்” என்று கூறி தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாறை, அதுவரையில் கவுன்சிலிங்கை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தார்.
இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிமன்ற அமர்வு, “கவுன்சிலிங் நடக்கட்டும். நாங்கள் அதை நிறுத்தமாட்டோம்” என்று கூறி, வழக்கை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதோடு, பதில் மனு தாக்கல்செய்ய தேசிய தேர்வு முகமைக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால், கவுன்சிலிங்கை நீதிமன்றம் நிறுத்தும் என அமர்வு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.