இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகள் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கேரள மக்கள் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளைத் தேடி அதிகம் செல்லுமிடம் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிக்கல் கிராமம்.
2016-ல் கேரள அரசு இயற்கை விவசாயம் மற்றும் பாலிஹவுஸ் விவசாயத்தை (Polyhouse farming) மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒரு திட்டத்தை தொடங்கியது. பாலிஹவுஸ் விவசாயம் என்பது ஒரு நவீன விவசாய நடைமுறை. இதில் பயிர்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன. இதில் பயிர்களின் தேவைக்கு ஏற்ப விவசாயிகள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
முதலில் இது சோதனை திட்டமாக தொடங்கப்பட்ட நிலையில் இங்கு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மாதந்தோறும் மார்க்கெட்டில் ஒரேயொரு சனிக்கிழமை மட்டும் விற்கப்பட்டது.
உள்ளூர் மக்கள் மத்தியில் இதற்கான டிமாண்டு அதிகமானது. வெளியூரிலிருந்தும் மக்கள் மார்க்கெட்டை தேடி வர ஆரம்பித்தனர். இதனால் வாரத்திற்கு இரண்டு முறையாவது மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில், வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் மார்க்கெட் செயல்பட்டது. இது விவசாயிகள் குழு மற்றும் பள்ளிக்கல் கிராம பஞ்சாயத்து மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது சனிக்கிழமை, பெண்களின் குழுவான குடும்பஸ்ரீ உறுப்பினர்களால் மார்க்கெட் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த மார்க்கெட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் புதன்கிழமையும் செயல்பட திட்டமிடப்பட்டது. புதன்கிழமை செயல்படும் மார்க்கெட்டை கிராம பஞ்சாயத்து நிர்வகிக்கிறது.
இந்நிலையில், மக்கள் இந்த மார்க்கெட் குறித்து ஒரு புகாரை முன்வைத்தனர். அதாவது மார்க்கெட் திறக்கப்படும் சில நிமிடங்களிலேயே காய்கறிகள் விற்றுத் தீர்ந்து விடுகிறது என்ற குற்றசாட்டை கூறினர். எனவே, ஒவ்வொரு வாடிக்கையாளரும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் நேர மாற்றத்தை மேற்கொண்டனர்.
இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை விவசாயிகள் நேரிடையாக இங்கு கொண்டு வந்து விற்கின்றனர். இதுவே, இந்த மார்க்கெட்டின் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது.