டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான ஆட்டம் நேற்று நடந்திருந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி திரில் வெற்றியைப் பெற்றிருந்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் க்ளாசென் 44 பந்துகளில் 46 ரன்களை அடித்திருந்தார். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை விடுத்து ஆங்கர் ரோலில் சிறப்பாக ஆடினார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த க்ளாசென் நியூயார்க் பிட்ச் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
க்ளாசென் பேசியதாவது, ‘டி20 ஆடுகிற மனநிலையிலேயே நாங்கள் இல்லை. மில்லருடன் ஆடிய போது ஓடிஐ யில் மிடில் ஆர்டரில் ஆடுவதைப் போல நினைத்துக் கொண்டுதான் ஆடினேன். இந்தியா – பாகிஸ்தான் போன்ற மாபெரும் அணிகளே இந்த பிட்ச்சில் திணறுகின்றன. 120 ரன்களைத்தான் எடுக்கின்றன. எனில், அதிரடியாக பெரிய ஷாட்களை ஆடும் எண்ணத்தோடு இந்த மைதானத்துக்கு வரக்கூடாது. பந்துக்கு பந்தாக ரன்கள் சேர்க்கவே எண்ணினோம். கடைசி 3 ஓவர்களில் ஒரு சில பெரிய ஷாட்களுக்கு முயன்றால் போதும் என நினைத்தேன்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் 260-270 ரன்கள் அடிக்கப்பட்ட சூழலில் ஆடிவந்தோம். அங்கிருந்து இந்த மாதிரியான சூழலில் ஆடுவது கடினம்தான். ஆனால், கிரிக்கெட் இப்படித்தான் இருக்கும். இதுவும் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான். வீரர்கள் இதற்கும் தகவமைத்துதான் ஆக வேண்டும். வெஸ்ட் இண்டீஸில் இதைவிட சிறப்பான பிட்ச்கள் கிடைக்கும் என நினைக்கிறேன்.
தீவிர கிரிக்கெட் விரும்பிகளுக்கு இந்த மாதிரியான ஆட்டங்கள் ரொம்பவே பிடிக்கும். இந்த மாதிரியான பிட்ச்கள் அணிகளுக்கிடையேயான இடைவெளியைக் குறைக்கிறது.
எந்த அணியாலும் எந்த அணியையும் ஆதிக்கம் செலுத்த முடியும். வெல்ல முடியும் என்ற நிலையைக் கொடுக்கிறது. எங்களுக்கு இதுவரை எல்லா ஆட்டங்களுமே பெரிய ஆட்டமாகத்தான் இருந்திருக்கிறது. நாங்கள் அவ்வளவு சுலபமாக எந்த ஆட்டத்தையும் வெல்லவில்லை. ஆனால், விற்பனைப் பண்டமாக பார்த்தால் இந்த மாதிரியான ஆட்டங்கள் எப்படி வியாபாரமாகும் என தெரியவில்லை.
பேட்டர்கள் இங்கிருந்து தப்பித்து வெஸ்ட் இண்டீஸூக்கு ஓடிவிடலாம் என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள். பௌலர்கள் வேண்டுமானால் நியூயார்க்கிலேயே தங்கிக்கொள்ள விரும்புவார்கள். (சிரித்துக்கொண்டே..)’ என்றார்.