பிடித்த பாடகர்களின் இசைக் கச்சேரியை யார் தான் தவறவிடுவார்கள். மழை, வெயில், புயல் என என்ன நடந்தாலும் சரி, அந்தக் கச்சேரியைத் தவறவிடக் கூடாது என நினைப்பவர்கள் உண்டு. இந்நிலையில் நிறைமாத கர்ப்பத்திலும் பெண் ஒருவர் பல மைல் தூரம் கடந்து இசைக் கச்சேரிக்குச் சென்றிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 31 வயதான ஜென் குட்டரெஸ் 38 வார கர்ப்பமாக இருந்தார். அவருக்கு குழந்தை பிறப்பதற்கான கால நிர்ணயம் இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தபோதும், பிரபல அமெரிக்க பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசைக் கச்சேரியைக் காண 412 மைல்கள் தூரம் பயணித்து தன் கணவருடன் மெல்போர்னுக்குச் சென்றுள்ளார்.
ஈராஸ் டூர் கச்சேரிக்கான விஐபி டிக்கெட்டுகளை இவர்கள் 2023 நவம்பர் மாதம் 600 ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33,000) கொடுத்து வாங்கியுள்ளனர். அப்போதே தனது கர்ப்பத்தின் காரணமாக இசைக் கச்சேரியைத் தவற விடக் கூடாது என்பதில் ஜென் தெளிவாக இருந்தார்.
இந்நிலையில் 2024-ல் நடந்த டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசைக் கச்சேரியில் அவரின் கணவர் மைக்கேல் சின் மற்றும் இரட்டை சகோதரியான டானியுடன் கலந்து கொண்டார். ஜென்னை இவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சியில் பத்திரமாக கவனித்துக் கொண்டனர்.
அப்போது ரசிகர்களின் மிகவும் விருப்பமான பாடலான `Reputation’ பாடலை பாடத் தொடங்கிய ஒரு மணிநேரத்தில் அவருக்கு கர்ப்பப்பை சுருங்கி விரிவடைந்திருக்கிறது (Contractions). அதாவது கர்ப்பப்பை சுருங்கி விரிவதன் மூலம் குழந்தை கருப்பை வாய்ப்பகுதிக்கு நகர்த்தப்படும். இது பிரசவமாகப் போவதன் அறிகுறி. இருந்தபோதும் அதனைப் பெரிதும் கண்டுகொள்ளாமல் நடனமாடி பாட்டு பாடி உற்சாகமாக இருந்துள்ளார்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பியதும் அந்த உணர்வு நின்றுவிட்டது. இதனால் மறுநாள் காலை அவர்கள் விமானத்தில் பயணித்து வீட்டிற்குச் சென்றுவிட்டனர். சில நாள்களுக்குப் பிறகு, அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தை பிறந்து தற்போது இரண்டு மாதங்களாகின்றன.
இது குறித்து ஜென் கூறுகையில், “நாங்கள் நிகழ்ச்சிக்குச் செல்வதில் பிடிவாதமாக இருந்தோம். நிகழ்ச்சியை நாங்கள் தவறவிடப் போவதில்லை. கர்ப்பப்பை சுருங்கி விரிவடைந்த நிலையிலும் நான் எங்கும் செல்லமாட்டேன்; ஒருவேளை குழந்தை பிறந்தாலும், இங்கேயே, இப்போதே பிறக்கட்டும் என எனக்குள் நினைத்துக் கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.