புவனேஸ்வர்: ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக மோகன் மாஜி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒடிசா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் மாஜி பதவியேற்பு விழா புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் நடைபெற்றது. இதில் மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு கே.வி. சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மாநில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்-கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
முன்னதாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பகவான் ஸ்ரீஜெகந்நாதருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் புவனேஸ்வர் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதன்மூலம், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பாஜக பெற்றது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பூபேந்திர யாதவ் பங்கேற்றனர். அதில், ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டார். கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஒடிசா பழங்குடியினரின் முக்கிய முகமான மோகன் சரண் மாஜி, 4 முறை ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர். ஒடிசாவின் 16-வது சட்டப் பேரவையில் கட்சியின் தலைமைக் கொறடாவாக செயல்பட்டுள்ளார். அதேபோல், ஒடிசா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கே.வி.சிங் தியோ, மாநிலத்தின் மூத்த பாஜக தலைவராக இருப்பவர். 6 முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். மற்றொரு துணை முதல்வரான பிரவாதி பரிதா, முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர். இவர் நிமாபாரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.