மும்பை: மகாராஷ்டிராவின் கோலாப்பூரிருந்து மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் கடந்த6-ம் தேதி 31 வயதான பாத்திமா கதுன் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் பயணம் செய்தார். அவருடன் அவரது கணவர் தயாப்பும் பயணம் செய்தார். இவர்கள் நவிமும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில், லோனாவாலா ரயில் நிலையத்தை கடந்த போது பாத்திமா, கழிப்பறைக்குச் சென்றார். நீண்ட நேரம் அவர் திரும்பாததால் அவரது கணவர் தயாப், அங்கு சென்று பார்த்தார். அப்போது பாத்திமா அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்த விவரம் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அருகிலுள்ள கர்ஜத் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு ரயிலில் பயணித்த பாதுகாப்பு போலீஸார் தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸை தயாராக வைத்திருக்குமாறு கூறினர். ரயில், கர்ஜத் ரயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் பாத்திமாவையும், பெண் குழந்தையையும் ஆம்புலன்ஸில் ஏற்றிஅழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் இருவரும் நலமாக உள்ளனர்.
இந்நிலையில், குழந்தை ரயிலில் பிறந்ததால் ரயிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்,ரயிலில் பயணம் செய்த சக பயணிகள், மகாலட்சுமி கோயிலுக்கு செல்லும்போது குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை மகாலட்சுமியுடன் ஒப்பிட்டும் பேசியுள்ளனர்.
இதனால் தனது மகளுக்கு மகாலட்சுமி என்று பெயரிட முடிவு செய்ததாக தயாப் தெரிவித்தார்.
இதுகுறித்து தயாப் கூறும்போது, ‘‘மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிறந்ததால், குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.