குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே தமிழகத்துக்கு பொற்காலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழகத்துக்கு பொற்காலம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி ‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கல்வி, ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தைப் பருவத்தில், தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்டநேரம் உழைப்பது மிகவும் கொடுமையானதாகும். இது அவர்களது எதிர்காலம், ஆரோக்கியம், உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு ஊறுவிளைவிப்பதாகும்.

நல்ல குடிமக்களாக உருவாக வேண்டிய குழந்தைகள், குழந்தைபருவத்திலேயே தொழிலாளர்களாக மாறுவதால் ஒரு நாடு தனதுசமூக வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், அமைதி, சமூகத்தின் சமச்சீர் தன்மை மற்றும் ஆற்றல்மிக்க மனித வளத்தையும் இழக்க நேரிடுகிறது.

பிஞ்சு குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறை என்ற கொடுமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவம், முறையான கல்வியை அளித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே தமிழக அரசின் அடிப்படை நோக்கமாகும்.

பல்வேறு நலத்திட்டங்கள்: பெற்றோருக்கு போதிய வருவாய் இல்லாதது, குடும்பச் சூழல்களால் குழந்தை தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை மீட்டு,தரமான கல்வி அளிக்கவும், பெற்றோரின் சுமையைக் குறைக்கவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை மீட்டு, சிறப்புப் பயிற்சி மையங்களில் சேர்த்து கல்வி அளித்து குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டிலேயே தமிழகம்தான் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

சட்ட அமலாக்கம், குழந்தைத்தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான மாநில செயல் திட்டம், நிலையான இயக்க நடைமுறைகள் ஆகியவற்றையும் தீவிரமாகச்செயல்படுத்தி, தமிழகத்தை 2025-ம்ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லா மாநிலமாக மாற்ற தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.

அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கூட்டு முயற்சிகளால் மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கை 2025-ம்ஆண்டுக்குள் அடைவோம் என்பது உறுதி.

எனவே, 14 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என அனைத்துபெற்றோரும், பணியில் அமர்த்தமாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதிபூண்டு, நாட்டை வளமிக்கதாக மாற்றுவோம். குழந்தைத்தொழிலாளர் இல்லாத எதிர்காலம், அதுவே தமிழகத்துக்கு பொற்காலம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.