‘சதி, நம்பிக்கை துரோகமே காரணம்’: உ.பி-யில் தோல்வி குறித்து பாஜக தலைமைக்கு அறிக்கை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி குறித்து அதன் தேசிய தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், தொகுதிகளில் கட்சியினரும், தலைவர்களும் செய்த சதியும், நம்பிக்கை துரோகமும் தோல்விக்கானக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் அதிக வெற்றியை பாஜக எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்க்காத வகையில் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. இதன் கூட்டணிகளில் ராஷ்டிரிய லோக் தளம் 2 மற்றும் அப்னா தளம் 1 தொகுதிகளும் கிடைத்தன. அதேநேரம், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 மற்றும் சுயேட்சை 1 தொகுதிகளை வென்றன.

பெரிய தோல்விக்கு மத்தியில், பாஜக சார்பில் வெற்றி பெற்றவர்களின் வாக்கு சதவீதமும் குறைந்திருந்தன. இதற்கான காரணங்களை வாக்குச்சாவடி அளவில் கண்டறிந்து விரிவான அறிக்கை அளிக்கும்படி வேட்பாளர்களிடம் பாஜக தலைமை கோரியிருந்தது. இதை ஏற்று தலைமைக்கு பாஜகவினர் அனுப்பிய அறிக்கையில் பல முக்கிய காரணங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில், தோல்வியுற்ற தொகுதிகளின் பாஜக தலைவர்களும், தொண்டர்களும் செய்த சதியும், நம்பிக்கை துரோகமும் முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உன்னாவ் தொகுதியில் மூன்றாவது முறையாக துறவியான சாக்ஷி மஹராஜ், 35,818 வாக்குகளில் வெற்றி பெற்றார். மற்றொரு துறவியும் மத்திய அமைச்சருமாக இருந்த சாத்வீ நிரஞ்சன் ஜோதி பத்தேபூரில் தோல்வி அடைந்துள்ளார். இதேநிலை, ஸ்ராவஸ்தி, லால்கன்ச், மற்றும் மோஹன்லால் கன்ச்சில் தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பல தொகுதிகளில் பாஜகவினர் வேட்பாளரின் பிரச்சாரங்களில் ஒத்துழைக்கவில்லை எனவும் புகார் உள்ளது. கூட்டணிக் கட்சிகளில் அப்னா தளத்தின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான அனுப்பிரியா பட்டேலுக்கு பாஜகவினர் ஆதரவு கிடைக்கவில்லை எனப் புகார் உள்ளது. இரண்டு முறை எம்பியான அனுப்பிரியா, மிர்சாபூரில் குறைவாக 37,810 வாக்குகளில் அவர் வெற்றி பெற்றார். அப்னா தளம் சார்பிலும் பாஜக தலைமைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி. பாஜகவின் மூத்த தலைவர்கள் வட்டாரம் மேலும் கூறும்போது, ‘‘இந்தமுறை தொகுதி நிர்வாகிகளில் எதிர்ப்பை மீறி பெரும்பாலான வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை வாய்ப்பளித்தது. இதில் அதிருப்தி அடைந்து அப்பகுதியின் எம்எல்ஏக்கள் பலரும் ஒத்துழைக்கவில்லை. இவர்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையில் சமர்ப்பித்துள்ளோம்.’’ எனத் தெரிவித்தனர்.

உபியில் இந்தமுறை தோற்ற பாஜகவின் மத்திய அமைச்சர்களில் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட ஏழு பேர் உள்ளனர். இவர்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்பகுதியின் பாஜகவினரில் பலரும் வெளிப்படையாக தலைமையின் தேர்வை விமர்சித்ததாகவும் புகார்கள் உள்ளன. தம் கட்சியினர் மீதான இந்த புகார்கள் மீது பாஜக தலைமை கூடி முடிவு எடுத்து அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயாராவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.