புதுச்சேரி: கோடை விடுமுறைக்குப் பின் புதுச்சேரியில் பள்ளிகள் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலில் இருந்து குழந்தைகளை காக்க பள்ளி நேரம் மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் தமிழகத்தைப் போல் அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வர அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியைகள் உள்ளனர்.
புதுவை அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முழு ஆண்டு தேர்வு முடிந்தவுடன் ஏப்ரல் 1-ம் தேதி இந்தக் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கின. ஏப்ரல் 29-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 6-ம் தேதிக்குப் பதிலாக 12-ம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளி வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்களை வரவேற்கும் விதமாக சில பள்ளிகளில் வாழை மரம், கொடி தோரணம் கட்டப்பட்டிருந்தது. சில பள்ளிகளில் மேளதாளங்கள் முழங்க ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.
பள்ளிகள் திறந்தவுடன் பாடநூல், நோட்டுகள், சீருடை வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது. பள்ளிகள் திறப்பால் புதுச்சேரி நகரெங்கும் காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்தது. வாகனங்கள் அதிகரிப்பாலும், சுற்றுலா பயணிகள் வருகையாலும் புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியது. இச்சூழலில் பள்ளி வாகனங்கள், டூவீலர்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதன் காரணமாக போக்குவரத்து நெரிசலால் குழந்தைகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் பள்ளி நேரத்தை மாற்றி அமைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இங்கு அரசுப் பணியில் உள்ளோர் அரசு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆடை அணிந்து வரவேண்டும். ஆண்கள் பேன்ட், வேட்டி அணிந்து பணிக்கு வருகின்றனர். அதேபோல் பெண்கள் சேலை, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிகின்றனர். ஆனால் ஆசிரியைகள் சேலை மட்டும் அணிந்து வருவது நடைமுறையாக உள்ளது.
இதுபற்றி பள்ளி ஆசிரியைகள் கூறுகையில், “ஆசிரியைகளுக்கு சேலையை விட சுடிதார் அணிந்து பணியாற்றுவது தற்போது உகந்ததாக உள்ளது. தமிழகத்தில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என அரசு கடந்த கல்வியாண்டே அறிவித்தது. புதுச்சேரியில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வருவது குறித்து முதல்வரோடு கலந்து பேசி உரிய முடிவெடுப்போம் என்று கடந்தாண்டே கல்வியமைச்சர் தெரிவித்தார். எனவே, புதுச்சேரி முதல்வருடன் கலந்து பேசி கல்வியமைச்சர் இவ்விஷயத்தில் இந்த கல்வியாண்டிலாவது ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வர அனுமதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.