சிவகங்கை: ‘‘சொந்தக் கட்சியை வலுப்படுத்த நினைப்பது கூட்டணிக்கு முரண் கிடையாது ’’ என்று கூறி காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையின் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் எம்பி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்பி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி, நகரத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “சிவகங்கையில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசில் முக்கிய அமைச்சர்களாக மீண்டும் பாஜகவைச் சேர்ந்தவர்களையே நியமித்துள்ளனர். அதிலும் பழைய நபர்களே உள்ளனர்.
கூட்டணி கட்சிகளுக்கு முக்கியமில்லாத அமைச்சர் பதவிகளே கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும் எதுவும் நடக்காது. ரயில்வே அமைச்சருக்கு கடந்த 5 ஆண்டுகளில் 49 மனுக்களை அளித்தேன். எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நபருக்கு மீண்டும் ரயில்வே அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளனர். மக்கள் பிரச்சினையைத் தீர்க்கும் மனப்பான்மை அவர்களிடம் இல்லை. இதனால் ஏமாற்றம் தான் கிடைக்கும்.
நாங்கள் எதிர்கட்சியாக உத்வேகத்துடன் செயல்படுவோம். பொது சிவில் சட்டம், குடியுரிமைச் சட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த பாஜக கூட்டணி கட்சிகளே ஆதரவளிக்குமா என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கட்டாயம் நாங்கள் எதிர்ப்போம். காங்கிரஸ் தமிழகத்தில் 2 முறை வென்றது கூட்டணி கட்சிகளால் தான். அதேசமயம் சொந்தக் கட்சியை வலுப்படுத்த நினைப்பது கூட்டணிக்கு முரண் கிடையாது” என்றார்.
முன்னதாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆய்வின்போது அங்கு வந்த திமுக பிரமுகரான குமாரசாமி, ‘‘மு.க.ஸ்டாலின் கூறியதால் தான் உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், சிவகங்கை வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கிறது. பேருந்து நிலையமே மிக மோசமாக இப்பதை பாருங்கள்’’ என்றார். இதையடுத்து அருகில் இருந்த காங்கிரஸார் குமாரசாமியை சமரசம் செய்து, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
சென்னையில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை “திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை,” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.