புவனேஸ்வர்: ஒடிசா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மாநில முதல்வராக மோகன் சரண் மாஜி (52)தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக கே.வி.சிங் தியோ,பிரபதி பரிடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் 147 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கடந்த மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 4-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாநிலத்தில் ஆட்சி அமைக்க 74 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளத்துக்கு 51, காங்கிரஸுக்கு 14, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கிடைத்தது. 3 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
இந்த சூழலில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பூபேந்திர யாதவ் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2000, 2009, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கேந்துசர்தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய சட்டப்பேரவை தேர்தலில் 4-வதுமுறையாக அதே தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணை முதல்வர்களாக கே.வி.சிங் தியோ, பிரபதி பரிடாஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கே.வி.சிங் தியோ, பலாங்கீர் பகுதி மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் ஆவார்.
புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மோகன் சரண் மாஜி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜெகந்நாதர் அருளால்ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்த நேரத்தில் 4.5 கோடி ஒடிசா மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகமீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை பாஜக அரசு காப்பாற்றும்’ என்று தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 2000-ம்ஆண்டு மார்ச் 5-ம் தேதி முதல்முறையாக ஒடிசா முதல்வராக பதவியேற்றார். ஐந்து முறை தொடர்ச்சியாக முதல்வர் பதவி வகித்த அவர் 25 ஆண்டுகள் ஒடிசாவை ஆட்சி செய்தார்
கடந்த 2000-ம் ஆண்டு மற்றும் 2004-ம் ஆண்டு பிஜு ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் பாஜகவும், பிஜு ஜனதா தளமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தின. இதில்உடன்பாடு ஏற்படாமல் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.
தேர்தலின்போது, நவீன் பட்நாயக்கின் உதவியாளரான தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவி.கே.பாண்டியன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்றும் அவரை தொண்டர்கள் புகழ்ந்தனர். இந்த நிலையில், வெளி மாநிலத்தை சேர்ந்தவரை முன்னிறுத்துவதாக கூறி, பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இது பட்நாயக் கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது. ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டப்பேரவை தேர்தலில் 78 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பிரதமர் மோடி முன்னிலையில் இன்று பதவியேற்பு: ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்க உள்ளார். அவரோடு 2 துணை முதல்வர்கள் பதவியேற்க உள்ளனர். மாநில அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பகவான் ஸ்ரீஜெகந்நாதருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் புவனேஸ்வர் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.