புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இந்திய தரப்பில் 21 கோட்டாவை வீரர், வீராங்கனைகள் பல்வேறு சர்வதேச போட்டிகளின் மூலம் உறுதி செய்திருந்தனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகளில் யார்-யாரை அனுப்புவது என்பதை கண்டறிய அவர்களுக்கு தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் தகுதி சுற்று போட்டி இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டவர்களின் அடிப்படையில் ஒலிம்பிக் அணியை தேர்வு செய்து தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதன்படி ரைபிள் பிரிவில் 8, பிஸ்டல் பிரிவில் 7 என்று மொத்தம் 15 பேர் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் பிடித்துள்ளனர். இது குறித்து இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் கலிகேஷ் நாராயண் சிங் தியோ கூறுகையில்,
தேர்வு கமிட்டியினர் நீண்ட விவாதத்துக்கு பிறகு மிக கவனமுடன் பரிசீலித்து அணியை தேர்வு செய்து இருக்கிறார்கள். தற்போதைய ஆட்டத்திறன், தகுதி வரையறை மற்றும் கொள்கையின் அடிப்படையில் மிகச்சிறந்த அணியை தேர்வு செய்து இருப்பதாக நினைக்கிறோம்.
அணி சிறப்பாக செயல்படுவதற்குரிய எல்லாவற்றையும் சரியாக செய்து இருப்பதாக நம்புகிறோம். ரைபிள், பிஸ்டல் பிரிவில் சில சிறந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் மீண்டும் திரும்புவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி வருமாறு:
ரைபிள் ஆண்கள்: சந்தீப் சிங், அர்ஜூன் பாபுதா (10 மீட்டர் ஏர் ரைபிள்), ஐஸ்வரி தோமர், ஸ்வப்னில் குசலே (50 மீ. மூன்று நிலை)
பெண்கள் : இளவேனில் வளறிவான், ரமிதா (10 மீ. ஏர் ரைபிள்) , சிப்ட் கவுர் சம்ரா, அஞ்சும் மோத்கில் (50 மீ. மூன்று நிலை)
பிஸ்டல் ஆண்கள்: சரப்ஜோத் சிங், அர்ஜூன் சீமா (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), அனிஷ் பன்வால், விஜய்வீர் சித்து (25 மீ. ரேபிட் ஏர் பிஸ்டல்).
பெண்கள்: மனு பாகெர், ரிதம் சங்வான் (10 மீ. ஏர் பிஸ்டல்), மனு பாகெர், இஷா சிங் (25 மீ. ஏர் பிஸ்டல்).
ஷாட்கன் பிரிவுக்கு 5 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். இத்தாலியின் லோனாட்டாவில் தொடங்கியுள்ள துப்பாக்கி சுடுதல் போட்டி வருகிற 18-ந்தேதி நிறைவு பெறுகிறது. அதன் பிறகு ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஷாட்கன் அணி அறிவிக்கப்படும்.
டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்திய தரப்பில் 15 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கமின்றி வெறுங்கையுடன் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.