தஞ்சாவூரில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “மேட்டூர் அணையில் நீர்மட்டம் ரொம்ப குறைவாக உள்ளது. தமிழக அரசின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூலம், விடாப்பிடியாக இருக்கின்ற சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூட்டணி அமைத்து விட்டு மக்களை மறக்காமல் திமுக தொடர்ந்து அதற்கான முயற்சி எடுத்து விவசாயிகளுக்கு தேவையான நீரை பெற்றுத்தர வேண்டும்.

ஏழு ஆண்டுகள் சுயநல மனிதரான பழனிசாமியை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு முடிவையும் நான் தனி மனிதனாக எடுக்க முடியாது. அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பம். அதற்கு ஒரு சில சுயநலவாதிகள், பதவி வெறியர்கள், பணத்திமிரில் தங்களை முன்னிறுத்தி கொள்வதற்காக அம்மாவின் கட்சியை அழித்து கொண்டுள்ளனர். இதில் வருத்த தக்க விஷயம் என்னவென்றால் இரட்டை இலை இருக்கிறது, அம்மாவின் கட்சி பழனிசாமியிடம் இருக்கிறது என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற தொண்டர்கள் தங்கள் நிலமையை உணர வேண்டும். அம்மா வழி நடத்திய அதிமுக இன்றைக்கு பலவீனமடைந்து வருகிறது. இதை நாங்கள் உணர்ந்ததால், அதிமுக தவறானவர்களிடம் போய்விட்டதால் அமமுக உருவானது.
எடப்பாடி பழனிசாமி பொய்யான பல புள்ளி விவரங்களை கூறி வருகிறார். 2019 தேர்தலில் 20 தொகுதிகளில் அதிமுக எடுத்த வாக்குகளில் தற்போது பயங்கர வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை, பணபலம் இருந்தும் சோபிக்க முடியவில்லை. எனக்கு தெரிந்து 13 சதவீதத்திற்கு மேல் அவர்களுடைய வாக்கு வங்கி சரிந்துள்ளது. எடபாடி பழனிசாமி திமுக-வின் பீ டீமாக இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காக வேட்பாளர்களை நிறுத்தினர். இருந்தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி பதினெட்டரை சதவீதம் வாக்குகள் எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதற்காக நாங்கள் போராடி வருகிறோம்.

பணபலத்தால் திமுக வெற்றி பெற்றது. இன்னும் சொல்லப்போனால் நான் போட்டியிட்ட தேனி உட்பட பல தொகுதிகளில் வாக்கு பதிவன்று தாய்மார்களை பார்த்து திமுக-விற்கு வாக்களிக்கவில்லை என்றால் ரூ.1,000 கொடுப்பதை நிறுத்தி விடுவோம் என திமுகவினர் மிரட்டியுள்ளனர். ஆனால் 2026 தேர்தலில் திமுக மக்களை மிரட்ட முடியாது. எடப்பாடி பழனிசாமி 2021 தேர்தலில் பணபலத்தை, கூட்டணி பலத்தை நம்பி எப்படி தோல்வியை சந்தித்தாரோ அதுபோன்ற பெரிய தோல்வியை, அதைவிட மோசமான தோல்வியை 2011-ல் திமுக பெற்ற படுதோல்வியை போன்று திமுக உறுதியாக சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி, இங்கு எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எங்கள் கூட்டணியை பலப்படுத்தி வெற்றி பெறுவோம்.
அதிமுக-வில் இன்றைக்கு உள்ள தொண்டர்கள் அந்த இயக்கம் மீண்டும் பலம் பெறுவதற்கு எதுவோ அதை முன்னெடுக்க வேண்டும். மற்றவர்கள் முன்னெடுப்பது மகிழ்ச்சி என்றாலும் தொண்டர்கள் செய்தால் தான் வெற்றி பெறும். அதிமுக-வை சின்னம்மாதான் காப்பாற்றுவார் என நிலவும் கருத்திற்கு தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் தான் முடிவு செய்வார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பலம் என்பது எங்கள் ஒற்றுமை. திமுக-வின் பணபலத்தை தாண்டி ஓட்டுக்கு ஒரு பைசா கொடுக்காமல் பல லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். அதிமுக கோட்டையில் இரட்டை இலை டெபாசிட் இழந்துள்ளது. அது எனக்கு வருத்தம். அதிமுக தோல்விக்கு காரணம் பழனிசாமி தான். ஓட்டுக்கு பணம் கொடுக்காதது எங்களுக்கு பலவீனம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஒற்றுமையாக முடிவெடுத்து வேட்பாளரை நிறுத்துவோம். ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதான் இருக்க முடியும். அதிமுக-வில் தலைமை பதவிக்கு வந்து அவர்கள் உட்கார்ந்த சீட்டில் உட்கார்வதால் அவர்களை போல் ஆக முடியாது. அவர்கள் லீடர்ஸ். தற்போது திணிக்கப்பட்ட தலைவர்கள் தான் அங்கு உள்ளனர். எல்லோரையும் கையகப்படுத்தி பணபலத்தால் வந்தவர்கள் தான். அதனால் தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடங்கி தற்போது முடிந்த தேர்தல் வரை தொடர்ந்து பத்து தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. 33 சதவீதம் வாக்கு வாங்கிய தொகுதிகளில் தற்போது 20 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர்.
அவர்கள் தவறை உணர்ந்து திருந்தினால் தான் அதிமுக பலப்படும். அதற்காகவே குத்திக்காட்டுகிறேன். அதிமுகவில் இணைவதற்கான எண்ணம் எங்களுக்கு இல்லை. எந்த காரணத்திற்காக அதிமுகவிலிருந்து வெளியேறினோமோ அதில் அணு அளவும் மாற்றமில்லை. தவறான தலைமை, ஒரு சுயநலக் கும்பலிடம் அதிமுக மாட்டிக் கொண்டிருக்கும் போது அதில் இணைவீர்களா என கேட்பது தவறு. அதிமுக தொண்டர்கள் நல்ல முடிவெடுக்கும் போது நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்.
பாஜக மீது சுமத்தப்பட்ட பழியெல்லாம் தாண்டி தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது. முன்பிருந்த எதிர்ப்பு தற்போது இல்லை அதனாலேயே பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பாஜக வளர்கிறது என்பதை மற்றவர்கள் விரும்பவில்லை என்றாலும் அது தான் உண்மை. பழனிசாமி தனியாக சென்றதால் தான் வாக்கு சதவீதம் வீழ்ந்துள்ளது. சிறுப்பான்மையினர் வாக்குகள் அவருக்கு விழுந்ததாக தெரியவில்லை.

25 வருடங்கள் நான் ராஜாவாக இருந்தேன் என ஜெயக்குமார் சொன்ன நிலையில் அவரது மகன் டெபாசிட் இழந்திருக்கிறார். தென் தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. திமுக எம்.பி-க்கள் டெல்லிக்கு சென்று என்ன செய்யப்போகிறார்கள்? சும்மா பேசிவிட்டு வரப்போறார்கள். அதிகார துஷ்பிரயோகம் செய்கிற திமுக-வை எதிர்த்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். அதிமுக தலைமைக்கு யார் வர வேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். நாட்டிற்கு நல்லது எது வந்தாலும் அதை ஆதரிப்போம், இல்லை என்றால் எதிர்ப்போம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88