பிக் பாஸ் கன்னடம் ஐந்தாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு அதில் டைட்டில் வின்னரானவர் பாடகர் சந்தன் ஷெட்டி.
அதே சீசனில் பங்கேற்ற நடிகை மற்றும் மாடலுமான நிவேதிதா கவுடா என்பவரை காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி நிவேதிதாவை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். நிவேதிதாவும் இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றின் மூலம் உறுதி செய்திருந்தார். அவர்களின் விவாகரத்து தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் இணைந்து பேட்டி ஒன்றை அளித்திருக்கின்றனர். அப்போது பேசிய சந்தன் ஷெட்டி, “என்னுடைய சிந்தனையும் நிவேதிதாவின் சிந்தனையும் வெவ்வேறாக இருக்கின்றன. நாங்கள் சேர்ந்து வாழ நிறைய முயற்சிகள் செய்தோம். ஆனால் அது சாத்தியமாகவில்லை. அதனால் இருவரும் கலந்து ஆலோசித்து விவகாரத்து பெற முடிவு செய்தோம். எங்களிடையே எந்த வெறுப்பும் இல்லை. நான் நிவேதிதாவுக்கு ஜீவனாம்சம் கொடுத்ததாக பொய்யான தகவலைப் பரப்பியுள்ளனர்.
நான் எந்த விதமான ஜீவனாம்சமும் அவருக்கு கொடுக்கவில்லை. ஜீவனாம்சம் வேண்டும் என்று அவர் கேட்கவும் இல்லை. நிவேதிதா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் விவாகரத்து பெற்றதாக சொல்கிறார்கள், அதுவும் தவறு. இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது எங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து விவாகரத்து தொடர்பாக பேசிய நிவேதிதா கவுடா, “எங்களின் விவாகரத்து குறித்து வரும் தகவல்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகள் எங்கள் குடும்பத்தை பாதிக்கிறது. தயவு செய்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம். நாங்கள் தொடர்ந்து எங்களின் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். இருவரின் சிந்தனைகள் வெவ்வேறாக இருப்பதால் விவாகரத்து பெற முடிவு செய்தோம். எங்களின் விவாகரத்து பற்றி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.