கரூர்: “தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுத்து வருவதால் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம். விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது,” என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறக்கவேண்டும். மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டும். ராசிமணல் அணை கட்டுமானப் பணிகளை தொடங்கிட வேணடும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பூம்புகார் முதல் மேட்டூர் வரை அச்சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் வாகன பேரணி நடைபெறுகிறது.
இந்த பேரணி திருச்சியில் இருந்து குளித்தலை, மகாதானபுரம், மாயனூர் வழியாக இன்று (ஜூன் 11) கரூர் வந்தது. கரூர் லைட்ஹவுஸ் முனையிலிருந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா வரை விவசாயிகள் நடந்து பேரணியாக சென்றனர்.
பேரணி முடிவில் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: “நாடு முழுவதும் விவசாயிகளின் எதிர்ப்பு எழுந்ததால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு பெரும்பான்மை இல்லாமல் 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுத்து வருவதால் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம்.
விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் வாயு திட்டத்தை நிறைவேற்ற கையொப்பமிட்டவர் தான் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின். அதை டெல்டா விவசாயிகள் என்றும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காமல் அபகரிக்கும் முயற்சியாக மத்திய அரசு நீர் பாசன இணை அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்த சோபண்ணாவை நியமித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, அவரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.
பின்னர், 10-க்கும் மேற்பட்ட வேன்களில் வாகன பேரணியாக வந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நாமக்கல் மாவட்டம் மோகனூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். முன்னதாக மகாதானபுரம் வந்த பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகளை காவிரி நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் முக்கனிகளை கொடுத்து வரவேற்றார்.